ரெய்டு - கைது - கட்சி உடைப்பு - அமைச்சர் பதவி ஆயுதங்களுடன்: தென் மாநிலங்களை வளைக்க திட்டமிடும் பாஜக!

First Published Apr 9, 2017, 2:34 PM IST
Highlights
BJP Mega Target on South Tamil Nadu


உத்திர பிரதேசத்தில் கிடைத்த பிரம்மாண்ட வெற்றியை அடுத்து தென் மாநிலங்களை வளைக்க வலுவான வியூகம் வகுத்து செயல்படுத்த தொடங்கியுள்ளது பாஜக.

அதற்காக, மோசடி, ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள தலைவர்களை கைது செய்வது, வலுவான கட்சிகளை உடைப்பது, எதிர்ப்பவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்து வாய்மூட வைப்பதுதான், அக்கட்சி தற்போது  கையில் எடுத்துள்ள ஆயுதங்கள்.

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய  6 மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்தியாவில் மொத்தம் 130 எம்.பி தொகுதிகள் உள்ளன.

அவற்றுள், 22  எம்.பி க்களை மட்டுமே தற்போது பாஜக  பெற்றுள்ளது. அதை, அடுத்து வரப்போகும் தேர்தலில்  50 ஆக உயர்த்த வேண்டும் என்பதே அக்கட்சியின் திட்டம்.

அதற்காக, ஒவ்வொரு கட்சியிலும் ஊழல், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள, முக்கிய தலைவர்களை சி.பி.ஐ, அமலாக்க பிரிவு உள்ளிட்டவற்றின் வாயிலாக, சசிகலா பாணியில் சிறையில் தள்ளுவது முதல் திட்டம்.

அடுத்து, வலுவாக உள்ள கட்சிகளை, துண்டு துண்டாக உடைத்து, அதை தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, தேவையானவற்றை செய்து கொடுப்பது இரண்டாவது திட்டம்.

மூன்றாவதாக, எதிர் கட்சியில் உள்ள இரண்டாம் கட்ட முக்கிய தலைவர்கள், ஒதுக்கப்பட்ட மற்றும் ஒதுங்கி இருக்கும் தலைவர்களுக்கு அமைச்சர் பதவி ஆசை காட்டி பாஜக வில் இணைப்பது மூன்றாவது திட்டம்.

மேற்கண்ட மூன்று திட்டங்களின் அடிப்படையிலேயே, பாஜக தமது வியூகத்தை அமைத்து அதை செயல்படுத்தி வருகிறது.

தென்னிந்தியாவில் உள்ள 6 மாநிலங்களில் பாஜக காலூன்றி உள்ள ஒரே மாநிலம் கர்நாடகா மட்டுமே. அங்கு தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

அதனால், கர்நாடக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களான, எஸ்.எம்.கிருஷ்ணா, சீனிவாச பிரசாத் ஆகியோரை, அமைச்சர் பதவி ஆசைகாட்டி ஏற்கனவே பாஜக விற்கு இழுத்தாகி விட்டது.

தமிழகத்தில், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுகவின் மற்றொரு அணியின் மூலம், சசிகலா தலைமையிலான அணியை துண்டாடும் வேலைகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.

அதையும் மீறி கூவத்தூர் கூத்துக்களை எல்லாம் அரங்கேற்றி, கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற நினைத்த சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் தள்ளப்பட்டுள்ளார். அடுத்து பொறுப்பேற்ற தினகரனையும் பெரா வழக்குகள் துரத்துகின்றன.

மணல் மன்னன் சேகர் ரெட்டி, மார்க்கத்தில் 2011 முதல் போயஸ் கார்டனோடு தொடர்பில் இருந்த அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், அவர்களின் பண பரிவர்த்தனை வழி முறைகள் அனைத்தையும் விசாரணையின் மூலம் கறந்து தனியாக வைத்திருக்கிறது பாஜக.

எனவே, தினகரன், எடப்பாடி என யார் முதல்வராக இருந்தாலும், அவர்களுடைய பலவீனங்கள், சிக்கல்கள் அனைத்தும் கோப்பு வடிவில் பாஜக மூத்த தலைவர்கள் கையில் இருப்பதால், பாஜகவை எதிர்க்கும் நிலையில் இங்கு  யாருமே இல்லை.

நெடுஞ்சாலை மைல் கற்களில் ஊர் பெயர்கள் இந்தியில் எழுதப்பட்ட போதும், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரி ரைடு நடந்த போதும், எந்த வித எதிர்ப்பையும் தெரிவிக்காமல், எடப்பாடி பழனிசாமி-மவுனசாமியாக இருந்ததற்கும் இதுவே காரணமாகும்.

அடுத்து திமுகவில் 2 ஜி  வழக்கு, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில், கருணாநிதியின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், அந்தக் கட்சியை சேர்ந்த மற்றவர்கள் என பலரும் பாஜக விடம் வசமாக சிக்கிக் கொண்டுள்ளனர்.

எனவே, தமிழகத்தில் வலுவான கட்சிகளான திமுக - அதிமுக ஆகிய இரு கட்சிகளும், பாஜக தொடுக்கும் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்த முடியாமல், பலவீனம் அடைந்து விட்டன.

புதுச்சேரியை பொறுத்த வரை, பாஜக செய்ய வேண்டிய அனைத்தையும், அங்கு துணை நிலை ஆளுநராக உள்ள கிரண் பேடியே கன கச்சிதமாக கவனித்து வருகிறார்.

நரி நாராயணசாமி என்று பெயர் எடுத்து, நமசிவாயத்தை முன்னிலைப்படுத்தி, தேர்தலை சந்தித்து  சாமர்த்தியமாக முதல்வராக அமர்ந்து கொண்டவர், கிரண் பேடியை எதிர்கொள்ள முடியாமல் திக்கி திணறுவதை அன்றாடம் பார்க்கிறோம்.

ஆந்திராவை பொறுத்தவரை, சந்திரபாபு நாயுடு, பாஜக வின் நட்பு வளையத்தில் இருப்பதால், தற்போதைக்கு கூட்டணி மட்டும் அமைந்தால் போதும் என்ற முடிவில் இருக்கிறது பாஜக.

தெலுங்கானா, புதிதாக அமைந்த மாநிலம் என்பதால், சந்திரசேகர் ராவிடம் அனுசரித்து போகவே பாஜக திட்டமிட்டுள்ளது.

கேரளாவை பொறுத்தவரை, காங்கிரஸ்-இடதுசாரிகள் என இரு தரப்புமே, வலுவான இரும்பு கோட்டை போன்று அரண் அமைத்து நிற்பதால், அங்கு காலடி பாதிக்க எப்படியாவது ஒரு பாதை கிடைக்காதா? என்று பாஜக தவித்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தை பொறுத்த வரை திமுக-அதிமுக வை பாஜக செயலிழக்க செய்தாலும், அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக திராவிடம், சுயமரியாதை, பகுத்தறிவு போன்ற சிந்தனைகளில் ஊறிய மக்களின் மனநிலையை அவ்வளவு எளிதாக மாற்றிவிட முடியாது என்பதை பாஜக தெளிவாகவே உணர்ந்துள்ளது.

ஆகவே, தமிழகத்தில் காலூன்றாவது, ஆட்சியை பிடிப்பது என்பதை தள்ளி வைத்து விட்டு, தமது கட்டுப்பாட்டில் இயங்கும் ஆட்சியை உருவாக்குவதே பாஜகவின் தற்போதைய செயல் திட்டம்.

அவ்வாறு உருவாக்கப்பட்டு  வரும் தலைமையை விமர்சிக்க முற்படும் யாராக இருந்தாலும் பாதிக்கப்பட நேரும் என்பதை விளக்கவே, அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் நிறுவனங்களில் நடத்தப்பட்ட ரைடு என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.

click me!