
பாஜகவில் நடிகை குஷ்பு இணைந்த பிறகு, பாஜகவினர் சமூக ஊடங்களில் சர்ச்சையாகவும் பெண்களை இழிவுப்படுத்தியும் பதிவிடும் கருத்துகளை கண்டித்து வருகிறார். அண்மையில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்த ராகுல்காந்தி, ‘நாக்பூர் டவுசர் வாலாக்களால் தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாது’ என்று விமர்சித்திருந்தார். இதற்கு பா.ஜனதா தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த நிர்மல்குமார் என்பவர், “அட முட்டாளே.. இத்தாலி பார்_டான்சர் இந்தியாவின் தலையெழுத்தை முடிவு செய்ய துடிக்கும்போது, எங்களுக்கு தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் எதிர்காலத்தை முடிவுவெடுக்கும் உரிமை எங்களுக்கு மட்டும்தான் உள்ளது” என்று பதிவிட்டிருந்தார்.
நிர்மல்குமாரின் இந்தப் பதிவை நடிகை குஷ்பு ட்விட்டரில் கண்டிருத்திருந்தார். இந்நிலையில் பாஜகவின் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகியான கோபிகிருஷ்ணன் என்பவர் ‘கண்டவனும் நுழைய கோவில் கருவறை என்ன கனிமொழியின் பெட்ரூமா?’ என்று தரம் தாழ்ந்து விமர்சித்திருந்தார். இந்தப் பதிவைக் கண்ட பலரும் நடிகை குஷ்புவுக்கும் பாஜகவில் உள்ள பெண் தலைவர்களுக்கும் ‘டேக்’ செய்து கேள்வி எழுப்பினர். இந்நிலையில் இந்தப் பதிவுக்கு நடிகை குஷ்பு ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.
அந்தப் பதிவில், “கட்சி அல்லது ஒரு தனிநபரைப் பொருட்படுத்தாமல் ஒரு பெண்ணைப் பற்றி இழிவான, அவமரியாதைக்குரிய கருத்து கண்டிக்கப்பட வேண்டும்.. கனிமொழி ஒரு மனைவி, ஒரு மகள், ஒரு பெண் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். அவர் மரியாதைக்கு தகுதியானவர், அதை அவருக்கு ஒவ்வொரு கட்டத்திலும் கொடுக்கப்பட வேண்டும்.” என்று குஷ்பு கண்டித்துள்ளார்.