
திருச்செந்தூர் முருகன் கோவிலில் வள்ளி குகை நடை பாதையை மறித்து முதல்வரின் மருமகன் சபரீசன் யாகம் நடத்தியதற்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஒரு தனி நபரின் வசதிக்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறைக்கு கடிதம் எழுதி கண்டித்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது, குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது, அதே நேரத்தில் பாஜக மற்றும் இந்து இயக்கங்களால் அத்திட்டங்கள் கடுமையாக எதிர்க்க பட்டு வருகிறது. அறநிலைத்துறை என்ற போர்வையில் இந்து கோவில்களையும், அதன் ஆகமங்களிலும், பழக்கவழக்கங்களிலும் தலையிடுவதாக பாஜக, இந்த அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்து அறநிலைத்துறை இந்துக்களுக்கும், கோவில்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டி வருகின்றன. மொத்தத்தில் இந்து சமய அறநிலையத் துறையிடம் இருந்து கோவில்களை மீட்க வேண்டும் என்று பாஜக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் முதலமைச்சரின் மருமகன் சபரீசன் யாகம் ஒன்றை நடத்தினார். அப்போது வள்ளி குகை செல்லம் நடையை மறித்து அந்த யாகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது, இதனால் அதிகாலை கோயிலுக்கு வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவலத்திற்கு தள்ளப்பட்ட தாகவும், இதனால் மக்கள் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டதாகவும், எனவே கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: திருச்செந்தூர் கோவிலில் யாகம் நடத்திய சபரீசன்... நாங்கள் ஆண்டவனுக்கு, ஆன்மீகத்திற்கு எதிரி அல்ல.. RS.பாரதி.
இந்த விவகாரத்தில் முதல்வரின் குடும்பத்தை பலரும் பல வகைகளில் விமர்சித்து வருகின்றனர். இதில் பாரதிய ஜனதா கட்சியில் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஓம் பிரபு இந்து சமய அறநிலையத்துறைக்கு இந்தச் செயலை கண்டித்து கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருக்கும் விவரம் பின்வருமாறு:-
இதையும் படியுங்கள்: "பெரியார் சிலைகளை அடித்து உடையுங்கள்".. வெறுப்பு கக்கிய பாஜக நபர்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்.
நான் மேற்கண்ட பொறுப்பில் சமுதாயப் பணி ஆற்றி வருகிறேன், கடந்த 2-8- 2022 அன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோவிலின் பழக்க வழக்கத்திற்கு மாறாக தமிழக முதல்வரின் உறவினர் என்பதற்காக மட்டும், தமிழக முதல்வரின் மருமகன் சபரீசன் என்பவருக்கும் அவருடன் வந்த அவரது நண்பருக்கும் மட்டும் தனிப்பட்ட முறையில் திருக்கோயிலுக்குள் யாகம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவர்களின் யாகம் முடியும் வரை சுமார் மூன்றரை மணி நேரம் பக்தர்கள் திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர், மேற்கூறிய அவர்கள் யாகம் செய்வதற்கு சட்டத்திற்கு முரணாகவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய செயல் சட்டவிரோதமானது மட்டுமின்றி கோடிக்கணக்கான இந்து மக்களின் நம்பிக்கைகளையும், உணர்வுகளை புண்படுத்த கூடியதாகும், இந்து சமய அறநிலையத் துறையின் பணியானது திருக்கோயிலின் கணக்கு வழக்குகளை சரி பார்ப்பதும் கோவில்களுக்கு தேவையான பண ஒதுக்கீடு சம்பந்தமான விவகாரங்களை மேற்பார்வையிடுவது மட்டுமே ஆகும்.
அவ்வாறான இந்து சமய அறநிலையத் துறையில் கொள்கைகளுக்கு முரணான திருக்கோயில்களில் உள்விவகாரங்களிலும், ஆகமங்களிலும் தலையிடக்கூடாது என்று பல்வேறு முறை நீதிமன்றங்கள் இந்து சமய அறநிலையத் துறைக்கு பல்வேறு அறிவுரைகளை கட்டளைகளையும் வழங்கியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.