
பாஜகவுடன் யார் கூட்டணி சேர்ந்தாலும், ஆர்.கே.நகரில் பாஜகவுக்கு ஏற்பட்ட முடிவுதான் ஏற்படும் என்று, ரஜினியும் பாஜகவும் இணைந்து போட்டியிட்டால் ஒரு இடம் கூட கிடைக்காது என்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் இன்று டிடிவி அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத், புகழேந்தி ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் நாஞ்சில் சம்பத், புகழேந்தி, புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், பேருந்து கட்டண உயர்வை தமிழகத்தைப் போன்று புதுச்சேரியிலும் செயல்படுத்தினால் எடப்பாடி பழனிசாமி ஏற்படும் நிலைதான் புதுவை முதலமைச்சர் நாராயணசாமிக்கும் ஏற்படும் என்று கூறினர். மேலும் பேசிய அவர்கள், இது சேவைத்துறை, இதில் லாபத்தை நோக்கமாக பார்க்கக் கூடாது என்றனர்.
எங்கள் கட்சி அதிமுகதான். விரைவில் தேர்தல் வந்தால் ஒரு அமைப்பு தேவை என்ற அடிப்படையில்தான் டிடிவி தினகரன் பேசியுள்ளாரே தவிர தனிக்கட்சி என்ற பேச்சுக்கு இடமில்லை; இதில் எங்களுக்குள் குழப்பமும் இல்லை என்றார்.
நாங்கள் எந்தவொரு காலத்திலும், எடப்பாடி, ஓபிஎஸ்-ஐ ஆதரிக்க மாட்டோம். அதற்காக கையெழுத்துப் போட்டுத் தரவும் தயார் என்றனர். ஜெ. மரணம் குறித்து, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், மற்றும் பல அமைச்சர்களையும் விசாரிக்கவில்லை. எனவே இது ஒருதலைப்பட்சமானது என்றும் அப்போது அவர்கள் குற்றம் சாட்டினர்.
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்வழக்கு தொடர்பாக, தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகவே கிடைக்கும் என்றனர். பாஜகவும், ரஜினியும் இணைந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளதே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், பாஜகவுடன் யார் கூட்டணி சேர்ந்தாலும், ஆர்.கே.நகரில் பாஜகவுக்கு ஏற்பட்ட முடிவுதான் ஏற்படும். இருவரும் இணைந்தால் உள்ளாட்சி தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்காது.
விரைவில் பல நடிகர்கள் கட்சி தொடங்க உள்ளார்களே அது உங்களுக்கு பாதிப்பா? என்று நாஞ்சில் சம்பத்திடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, உண்மையில் ரஜினி, கமல் கட்சி தொடங்க மாட்டார்கள் என்றார் நாஞ்சில் சம்பத்.