
வரலாறு தெரியவில்லை என்றால் கமலை எனக்கு போன் செய்து வரலாறு கற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் வரும் 21ம் தேதி அவர் பிறந்த ராமநாதபுரம் மண்ணிலிருந்து அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் இல்லத்தில் அரசியல் பெயரை அறிவித்து அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுதொடர்பாக ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர் ஆகிய 4 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல் தனது ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக வேளச்சேரியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல், தமிழகத்தில் கல்வி, மருத்துவம், சுகாதாரம், போக்குவரத்து ஆகிய சேவைகள் சரியாக செயல்படுத்தப்படுவதில்லை. இவையனைத்தையும் டிஜிட்டல்மயமாக்கி முறைப்படுத்துவேன் என கமல் தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், டிஜிட்டல் மயமாக்குவேன் என கமல் கூறுவது அவரது அறியாமையைத் தான் காட்டுகிறது. 2001ம் ஆண்டிலேயே டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. தற்போது அனைத்து சேவைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு விட்டன. அரசின் வரலாறு கமலுக்கு தெரியவில்லை என்றால், எனக்கு போன் போட்டு கற்றுக்கொள்ளலாம் என கமலை ஜெயக்குமார் கிண்டல் செய்தார்.