
இலை மீதுதான் தாமரை மலரும் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், இலையை மறைத்து விட்டு தாமரையை மட்டுமே கண்ணுக்கு தெரிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது பாஜக.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுக, சசிகலா அணி, பன்னீர் அணி என இரண்டாக பிரிந்தது. அதில், சசிகலா அணி, எம்.எல்.ஏ க்களை கையகப்படுத்தி ஆட்சியை தக்க வைத்து கொண்டது.
அதன் பின்னர், ஆர்.கே. நகர் இடை தேர்தலில், அதிமுகவின் இரு அணிகளும், இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரியதால், கட்சியின் பெயரோடு, இரட்டை இலை சின்னமும் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது.
தற்போதுள்ள நிலையில், இரு அணிகளும் இணைந்து, தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெற்றால் மட்டுமே, இரட்டை இலை சின்னத்தை பெறமுடியும்.
ஆனால், முதல்வர் பதவி, அதிமுக பொது செயலாளர் பதவி ஆகிவற்றை கைப்பற்ற பன்னீர் அணி தூக்கிக்கிறது. அதே சமயம், அந்த இரண்டையும் விட்டு கொடுக்க எடப்பாடி அணி தயாராக இல்லை.
அதனால், அணிகள் இணைப்பு என்பது இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்பது உறுதியாகி விட்டது. இருந்தாலும், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக இரு அணிகளும் கடுமையாக போராடி வருகின்றன.
ஆனால், இந்த சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு, இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாக முடக்கி, அதன் மூலம் தமிழகத்தில் தாமரையை மலர செய்யும் திட்டத்தை முடுக்கி விட்டுள்ளார் பிரதமர் மோடி.
ஏற்கனவே, அதிமுகவின் இரு அணிகளையும் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள மோடி, தமிழகத்தில் தாமரையை மலர செய்யும் திட்டத்திற்கு, எடப்பாடி மற்றும் பன்னீரை இரு தோள்களாக பயன்படுத்தி கொள்ள முடிவு செய்துள்ளார்.
அதற்காக, எடப்பாடி-பன்னீர் ஆகிய இருவரையும் தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டே, இரு அணிகளையும் இணைய விடாமல் பார்த்து கொள்வது. அதன் மூலம், இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாக முடக்கி வைப்பது அவரது முதல் திட்டம்.
அதனால், அடுத்து வரும் தேர்தலில், ஆர்.கே.நகரில் நடந்தது போல, அதிமுகவின் இரு அணிகளுமே, சுயேச்சை சின்னத்தில் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
மக்களுக்கு அறிமுகம் இல்லாத சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவதை விட, மக்களுக்கு ஏற்கனவே அறிமுகமான, தாமரை சின்னத்தில் போட்டியிட, பாஜக சார்பில் அதிமுகவிற்கு நெருக்கடி கொடுக்கப்படும். இது மோடியின் இரண்டாவது திட்டம்.
ஒரு வேளை, அதிமுக தரப்பில் அதை ஏற்க மறுத்தால், சேகர் ரெட்டி வீட்டில் சோதனை நடத்தியதன் தொடர்ச்சியாக, அவரது நெருங்கிய நண்பர்களான பன்னீர் மற்றும் எடப்பாடிக்கு, வருமானவரி மற்றும் சி.பி.ஐ சோதனை நெருக்கடி கொடுக்கப்படலாம்.
இவ்வாறு பல்வேறு பலவீனங்களுக்கு ஆளாகி உள்ள அதிமுகவே, பாஜகவை சுமப்பதற்கும், அதன் மூலம் தாமரையை தமிழகத்தில் தழைக்க செய்வதற்கும் சரியான வழி என்று முடிவு செய்யப்பட்டு, பாஜக அந்த பணிகளை தீவிரமாக முடுக்கி விட்டுள்ளது.
இப்படி செய்வதன் மூலம், பாஜகவுக்கு கூடுதல் உறுப்பினர்கள் கிடைக்கும். மறுபக்கம், அதிமுகவுக்கு விழுந்த வாக்குகள் அனைத்தும், பாஜகவுக்கு விழுந்த வாக்குகளாக கணக்கில் வந்து சேரும்.
இதை செம்மையாக செய்து முடிக்க பன்னீரும், எடப்பாடியும், பிரதமர் மோடியின் தளபதிகளாக தமிழகத்தில் செயல்படுவார்கள் என்று, டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.