ஒருமணி நேர சந்திப்பு... 40 தொகுதிகள்...வலியுறுத்திய பாஜக... வளைந்து கொடுக்காத எடப்பாடியார்..!

By Selva KathirFirst Published Nov 22, 2020, 6:28 PM IST
Highlights

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பாஜக தரப்பில் சுமார் 40 தொகுதிகள் வலியுறுத்தப்பட்ட நிலையில் எந்த உறுதிமொழியும் கொடுக்காமல் எடப்பாடி பழனிசாமி நழுவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பாஜக தரப்பில் சுமார் 40 தொகுதிகள் வலியுறுத்தப்பட்ட நிலையில் எந்த உறுதிமொழியும் கொடுக்காமல் எடப்பாடி பழனிசாமி நழுவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கலைவாணர் அரங்கில் பேசும்போதே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாஜக – அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்தினார். இதனால் எடப்பாடி பழனிசாமி – அமித் ஷா சந்திப்பும் உறுதியாகிவிட்டது. ஆனால் பிற்பகல் வரையில் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்திப்பதில் சந்தேகம் நீடித்து வந்தது. இந்த சந்தேகங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமித் ஷா முன்னிலையில் அதுவும் அரசு விழாவில் மோடி அரசை மிகவும் புகழ்ந்து பேசியதுடன் கூட்டணியையும் உறுதிப்படுத்திவிட்டார். இதன் பிறகு எடப்பாடி பழனிசாமி – அமித் ஷா சந்திப்பிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

இந்த சந்திப்பின் போது மிக மிக முக்கிய நபர்களுக்கு மட்டுமே அனுமதி என்று சொல்லப்பட்டுவிட்டது. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் பேச்சில் பங்கேற்றனர். மொழி பெயர்ப்புக்கு உயர் அதிகாரி ஒருவர் உடன் சென்றதாக சொல்கிறார்கள். இதே போல் பாஜக தரப்பில் அமித் ஷா, சி.டி ரவி மற்றும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் மட்டுமே இருந்ததாக கூறுகிறார்கள். பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூட அனுமதிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வியூகம் தொடர்பாகபே அதிக நேரம் பேசியதாக சொல்கிறார்கள். திமுகவின் நடவடிக்கைகள், கூட்டணி பலம் உள்ளிட்டவை குறித்து அமித் ஷா ஆர்வத்துடன் கேட்டறிந்ததாக சொல்கிறார்கள். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் வென்ற திமுக, உள்ளாட்சித் தேர்தலில் தோற்றது எப்படி என்றும் அதிமுக தரப்பில் எடுத்துரைக்கப்பட்டதாக கூறுகிறார்கள். மேலும் தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் சிலர் வரம்பு மீறி பேசுவது தொடர்பாகவும் அமித் ஷா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.

இதனை தொடர்ந்து கடைசியாக பாஜகவிற்கு தமிழகத்தில் 40 இடங்கள் வரை தேவை என்று அமித் ஷாவை வைத்துக் கொண்டு பாஜக தமிழக மேலிடப்பொறுப்பாளர் சி.டி.ரவி வலியுறுத்தியதாக கூறுகிறார்கள். ஆனால் கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வர உள்ளதாகவும் யார் யார் கூட்டணியில் உள்ளார்கள் என்பதை தீர்மானித்த பிறகு தொகுதி எண்ணிக்கை பற்றி பேச முடியும் என்று எடப்பாடி எடுத்துரைத்ததாகவும் இதனை ஓபிஎஸ் ஆமோதித்ததாகவும் சொல்கிறார்கள். அதே சமயம் 40 தொகுதிகள் வரை கேட்ட பாஜக ஒரு கட்டத்தில் 30 தொகுதிகள் வரை இறங்கி வந்ததாகவும் அதற்கு ஓபிஎஸ் – இபிஎஸ் ஓகே சொல்லிவிட்டதாகவும் பேச்சு அடிபடுகிறது.

click me!