
தீவிரவாத செயல்களில் ஈடுபடும் அனைத்து அமைப்புகளையும் கர்நாடக அரசு விட்டு வைக்காது என தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் கூட தீவிரவாத இயக்கங்கள்தான் என கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அருகே பாஜக பிரமுகர் தீபக் ராவ் என்பவர் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு காரணமாக குற்றம்சாட்டப்படும் பாப்புலர் இந்தியா இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என பாஜகவினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சாம்ராஜ்நகருக்கு வந்த முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தீபக் ராவ் கொலை தொடர்பாக மேலும் சில உண்மையான தகவல்களுக்காக காத்திருப்பதாக குறிப்பிட்டார்.
பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா, ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், விஸ்வ ஹிந்து பரிஷத் அல்லது எந்த அமைப்பாக இருந்தாலும் சமூகத்தில் அமைதியின்மையை உண்டாக்குவதை சகித்துக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.
பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா ஆகட்டும். ஆர்.எஸ்.எஸ். அல்லது பஜ்ரங்தள் ஆகிய இயக்கங்கள் ஆகட்டும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் இந்த அரசு விட்டுவைக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் ஆகியவையும் ஒருவகையில் பயங்கரவாத இயக்கங்கள்தான் என சித்தராமையா குறிப்பிட்டார்.