
மத்திய அரசின் உதவியுடன் செயல்படும் `கேந்திரிய வித்யாலயா' பள்ளிகளில் இந்து மத பிரார்த்தனை பாடல்களை மட்டும் பாடுவதற்கு அனுமதிப்பது ஏன்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விமர்சனங்கள்
நாட்டில் மத்திய அரசின் நிதியுதவியுடன் 1,100-க்கும் அதிகமான கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்கும் நிலையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்து மத பிரார்த்தனை பாடல்களை பாடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் உதவியுடன் செயல்படும் பள்ளிகளில் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் முன்னுரிமை அளிப்பதா என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
இந்த நிலையில், கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவரின் தந்தை விநாயக் ஷா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இவர் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர். உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்து மத பிரார்த்தனை பாடல்கள் பாடப்படுகின்றன. இது மாணவர்களின் கல்வியறிவில் தடைகளை ஏற்படுத்துகின்றன. இது மற்ற அனைத்தையும் விட மத நம்பிக்கைக்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை மாணவர்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக புகுத்தி வருகிறது.
கண்காணிக்க ஆசிரியர்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பல்வேறு மதத்தை பின்பற்றுவோர் மாணவர்களாக உள்ளனர். அவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் முன்னர் பிரார்த்தனையில் பங்கேற்பது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் இந்து மத பிரார்த்தனை பாடல்கள் மட்டும் பாடப்படுகிறது. பிரார்த்தனையின்போது, மாணவர்கள் தங்களது இரு கரங்களையும் சேர்த்து பாடல்களை பாடுகிறார்களா? என்பதை கண்காணிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதில் தவறிழைக்கும் மாணவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.
தடை விதிக்க கோரிக்கை
ஒட்டு மொத்த பள்ளி மாணவர்கள் முன்பாக அவர்கள் அவமரியாதை செய்யப்படுகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அரசியலமைப்பு சட்டம் பிரிவு 28 தடை விதிக்கிறது. 28(1)-ன்படி, அரசின் உதவியோடு செயல்படும் (கேந்திரிய வித்யாலயா) பள்ளிகளில் குறிப்பிட்ட மதத்தின் வழிபாடு நடத்தக்கூடாது. ஆனால் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்து மத பாடல்கள் பாடப்படுகின்றன. இதனை சிறுபான்மை சமூகத்தினர், கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்கள் ஏற்க மாட்டார்கள். எனவே அரசியலமைப்பு சட்டத்திற்கு மாற்றாக நடைபெறும் இந்த நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
நீதிபதிகள் கருத்து
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.எப். நாரிமன் தலைமையிலான அமர்வு, ‘இந்த வழக்கு மிகவும் முக்கியமானது. அரசியலமைப்பு சட்டத்தை தொடர்புபடுத்தி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனர். பின்னர், இந்த வழக்கு குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.