பேச்சில் தீப்பொறி.. தேமுதிக முக்கிய பிரமுகர் சாலை விபத்தில் உயிரிழப்பு.. நேரில் அஞ்சலி செலுத்திய பிரேமலதா..!

By vinoth kumarFirst Published Sep 12, 2021, 2:34 PM IST
Highlights

சென்னை முகப்பேர் கிழக்கு சர்ச் சாலையை சேர்ந்தவர் தீப்பொறி செல்வதாசன் (49). இவர், தேமுதிக கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளராக இருந்து வந்தார். அவரை தீப்பொறி, பேச்சு புலி அடைமொழி வைத்து அழைப்பர். 

தேமுதிக தலைமை பேச்சாளர் தீப்பொறி செல்வதாசன் சாலை விபத்தில் உயிரிழந்தார். இவரது உடலுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயபிரபாகரன் ஆகியோர் அவரது இல்லத்திற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை முகப்பேர் கிழக்கு சர்ச் சாலையை சேர்ந்தவர் தீப்பொறி செல்வதாசன் (49). இவர், தேமுதிக கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளராக இருந்து வந்தார். அவரை தீப்பொறி, பேச்சு புலி அடைமொழி வைத்து அழைப்பர். இவரது பேச்சை கேட்பதற்கே தேதிமுகவில் ஒரு கூட்டம் உள்ளது. இவரது பேச்சு தலைமை வரை பாராட்டும் வகையில் இருக்கும். மேலும் அந்தமான், ராமநாதபுரம், பாதி உனக்கு பாதி எனக்கு  என்பது உள்ளிட்ட  சினிமா படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். 

தேமுதிக கட்சிக்கு தேர்தல் நேரங்களில் பல்வேறு பாடல் அடங்கிய குறுந்தகடுகளை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், தீப்பொறி செல்வதாசன் நேற்று மாலை நொளம்பூர் பாடசாலை அருகே தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது,  திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில்,  செல்வதாசன் மற்றும் அவரது நண்பர் படுகாயமடைந்தனர். 

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் உடனே மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டா மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.  இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனையடுத்து, அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து நொளம்பூரில் அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயபிரபாகரன் அவரது இல்லத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தி நிதி உதவியை வழங்கினார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!