பாரதி வழியில் பாரதம்... மகாகவியின் கவிதைகளில் லயித்துப்போன பிரதமர் மோடி..!

By Thiraviaraj RMFirst Published Sep 11, 2021, 12:54 PM IST
Highlights

இதோ மோடி, பாரதியாரையும் அவரது பாடல்களையும் நினைவு கூர்ந்த தருணங்களை திரும்பிப் பார்க்கிறோம்.  
 

பாரதி வழியில் பாரதம் என்கிற கொள்கைப்பிடிப்பு உள்ளவர் பிரதமர் மோடி. தமிழகத்தில் மட்டுமின்றி நாடாளுமன்ற உரையிலும் பாரதியின் பாடல்களை எடுத்துரைத்தே தனது பேச்சை ஆரம்பித்து மேற்கோள் காட்டுவதை வழக்கமாக கொண்டவர். இதோ மோடி, பாரதியாரையும் அவரது பாடல்களையும் நினைவு கூர்ந்த தருணங்களை திரும்பிப் பார்க்கிறோம்.

 

பாரதியாரை போற்றி தமிழில் பிரதமர் மோடி டுவிட்டர் பதிவுகளை போட்டுள்ளார். அதில், சிறப்புவாய்ந்த சுப்ரமணிய பாரதியாரின் 100வது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நாம் நினைவு கூறுகிறோம். 2020 டிசம்பரில் அவரைப்பற்றி நான் பேசியது இதோ. ‘’துணிச்சலாக செயல்பட்டவர் பாரதியார். அச்சமில்லை அச்சமில்லை பாடலை அப்போது மேற்கோள் காட்டி பேசினார்.

சிறப்புவாய்ந்த சுப்ரமணிய பாரதியாரின் 100வது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நாம் நினைவு கூறுகிறோம்’’ எனத்தெரிவித்துள்ளார் மோடி.

பாரதியார் மீதும் அவரது கவிதைகள் மீதும் மிகுந்த பற்றுக்கொண்டவர் பிரதமர் மோடி. அவரது நினைவு நாளில் மட்டுமல்ல. தமிழகம் தாண்டிய பல விழாக்களிலும், நிகழ்வுகளிலும் பாரதியின் பாடல்களை மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார் மோடி. இந்தியா முழுவதும் பாரதியின் பாடல்களை கொண்டு சேர்க்க வேண்டும் என சூளுரைத்து இருக்கிறார் மோடி. 

இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி 14ம் தேதி சென்னையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்த மோடி தமிழில் வணக்கம் கூறி தனது உரையை தொடங்கினார். அப்போது பேசிய அவர், ‘’தன் இன்பத்தமிழ் கவிதைகளால் இந்திய மக்களின் விடுதலை வேட்கையை தூண்டியவர், பெண்ணுரிமை போராளி, சாதி மறுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய சமூக சீர்திருத்தவாதி, “மகாகவி” என போற்றப்பட்ட சுப்ரமணிய பாரதியாரின் நூற்றாண்டு நினைவுநாளில் அவரது தேசப்பற்றையும், மொழிப்பற்றையும் போற்றி வணங்குகிறேன்’’ என மரியாதை செலுத்தினார். 

2019 செப்டம்பர் 11ம் தேதி, மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழில் ``மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அவரை நினைவுகூர்கிறேன். தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர். அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன.

சுப்பிரமணிய பாரதி, நீதி சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக நம்பினார். `தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று ஒருமுறை சொன்னார். மனிதனின் அவதியைப் போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது” எனப் பதிவிட்டு மரியாதை செலுத்தினார். 

2019 நவம்பர் 24ம் தேதி 'மான் கி பாத்' 59-வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, ’'முப்பது கோடி முகமுடையாள், உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்' என்ற பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி, நமது நாட்டுக்கு 30 கோடி முகங்கள் இருந்தாலும், தேசம் என்ற ஒரே உடலை தான் கொண்டுள்ளோம் என்ற அர்த்தத்தை வலியுறுத்தி, 18 வகை மொழிகள் இங்கு பேசப்பட்டாலும், நாம் அனைவரும் இந்தியர் என்பதில் ஒற்றுமையாக இருக்கிறோம். ஒவ்வொன்றும் நமக்கு ஒன்றை கற்றுத் தருகின்றன’’என உவமை கூறினார் மோடி.

 

பாரதியின் 139- வது பிறந்த நாளில் நடைபெற்ற சர்வதேச பாரதி விழாவில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, பாரதியாரின் பெருமைகளை நினைவு கூர்ந்தார். ’’கவிஞர், பத்திரிக்கையாளர், சுதந்திர போராட்ட வீரர் என பன்முகங்கள் கொண்டவர் பாரதியார், அவர் மிகச்சிறந்த சமூக சீர்திருத்த கருத்துக்களை கொண்டவர், அச்சம் இல்லை.. அச்சம் இல்லை... அச்சம் என்பது இல்லையே என்ற பாடல்வைகளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி  வானமே இடிந்து விழுந்தாலும் சரி அச்சம் இல்லை... அச்சம் இல்லை என்ற இந்த பாடலை இளைஞர்கள் உதவேகமாக கொள்ள வேண்டும்.  அச்சமில்லை என்றால்தான் இளைஞர்கள் வெற்றி பெறமுடியும்.

தமிழையும் , இந்தியாவையும் இரண்டு கண்களாக பாவித்தவர் பாரதியார். வாழ்ந்தது வெறும் 39 ஆண்டுகள்தான் என்றாலும் மாபெரும் சாதனைகள் படைத்துள்ளார் பாரதியார். பெண்களுக்கான சுதந்திரமும், அதிகாரமும் பாரதியின் முக்கிய லட்சியங்களில் ஒன்றாக இருந்தது, நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையுடன் பெண்கள் விளங்கவேண்டும் என்றும் அவர் எழுதியுள்ளார். பெண்கள் முன்னேற்றத்திற்கு பாரதி முக்கியத்துவம் அளித்ததற்கு ஏற்ப, மத்திய அரசும் 15 கோடி பெண்களுக்கு முத்ரா திட்டத்தின்கீழ் கடன் வழங்கி பொருளாதார வலிமைமிக்கவர்களாக மாற்றி இருக்கிறது’’ என எடுத்துரைத்தார்.

பாரதியாரின் புத்தகங்களை நாடு முழுவதும் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். துணிச்சலாக செயல்பட்டவர் மகாகவி பாரதி.  தமிழ் மக்களுக்கும், பாரம்பரியத்திற்கும் தலைவணங்குகிறேன். பாரதி பிறந்த மண்ணில் நிற்பதில் பெருமை படுகிறேன்’’ என எப்போதும் பாரதியை நினைத்து பெருமை கொண்டு வருகிறார் பிரதமர் மோடி.
         

click me!