
பாரதியின் பிறந்த தினத்தை மகாகவி நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று அறிவித்ததோடு அவரின் புகழை மீட்டெடுக்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டிருப்பதை மனதாரா வரவேற்று பாராட்டுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரம் பின்வருமாறு:-
தந்தை பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தபோது அதனை நான் வரவேற்பதோடு, இந்திய விடுதலைக்கு முன் மொழிப் பற்றும், நாட்டுப் பற்றும் ஒருமைப்பாட்டையும் காவிரி போல் பெருக்கெடுத்து ஓடும் தன் பாட்டுத் திறத்தால் கவிதை நயத்தால் உணர்த்தி உறங்கிக் கிடக்கும் மக்களை தட்டி எழுப்பி விடுதலை உணர்வை ஊட்டிய மகாகவி பாரதியாரை ஒப்பிட்டு தமிழ்நாட்டில் சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார் அவர்கள் என்று கூறியிருந்தேன். இந்த நிலையில் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11ம் நாள் மகாகவி நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பது அனைவரும் வரவேற்கக்கூடிய ஒன்று.
தமிழ் மொழியின் சிறப்பை உலகுக்கு உணர்த்திய கவிஞர் மகாகவி பாரதியார் மொழிப்பற்று உடையவனே நாட்டுப்பற்று உடையவனாய் வாழ இயலும் என்பதை மெய்ப்பித்து காட்டியவர், மகாகவி பாரதியார் விடுதலை பாடல்களால் தமிழகத்தை உயிர் பெறச் செய்தவர், மகாகவி பாரதியார் செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என தாய்நாட்டின் உயர்வை வியந்து பாடிய பாரதி, நாட்டுப் பற்றினை போற்றும் வகையில் வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திரு நாடு என்று பாரத நாட்டையும் போற்றி மகிழ்ந்தார்.ஆணும் பெண்ணும் நிகரென கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்குமாம் என்ற மகாகவி பாரதியாரின் வாக்கிற்கிணங்க பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பெண்ணுரிமையை நிலைநாட்டும் வகையிலும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், தாலிக்கு தங்கத்துடன் கூடிய திருமண நிதி உதவி திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், மகளிர் இருசக்கர வாகன திட்டம் என பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தியதோடு, சென்னை திருவல்லிக்கேணியில் மகாகவி பாரதியார் அவர்கள் வாழ்ந்த இல்லத்தை புதுப்பித்து அதனை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தவர் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.
ஏழை என்றும், அடிமை என்றும் எவனும் இல்லை சாதியில் என்று பாடிய புரட்சிக் குயில் பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11ம் நாள் மகாகவி நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று அறிவித்ததோடு, பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல் மற்றும் கட்டுரைகளை தொகுத்து மனதில் உறுதி வேண்டும் என்ற புத்தகத்தை மாணவ மாணவியருக்கு வழங்குதல், பாரதியின் உருவச்சிலைகள் உருவம் பொறித்த கலைப்பொருட்களை பூம்புகார் நிறுவனத்தின் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்தல், பாரதி குறித்த நிகழ்வுகளை பாரெங்கும் பாரதி என்ற தலைப்பில் நடத்துதல், திரையில் பாரதி என்ற நிகழ்வுகளை நடத்துதல்,
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியின் பெயரில் இருக்கை அமைத்தல், உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை பராமரிக்க அரசு சார்பில் நிதி உதவி வழங்குதல், உள்ளிட்ட 14 அறிவிப்புகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்புகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்பதோடு, இந்த அறிவிப்புகளை வெளியிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவராக இருந்தாலும் முதல்வர் ஸ்டாலினின் திட்டங்கள், மற்றும் அவரின் செயல்பாடுகளை தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் இயல்புக்கு மாறாக மனம் திறந்து பாராட்டி வருகின்றனர். அத்துடன் ஓ.பன்னீர் செல்வம் அளுங்கட்சியினரின் அறிவிப்புகளுக்கு சட்டமன்றத்தில் இணக்கம் காட்டி வருவதுடன், இதுபோல வெளிப்படையாகவே முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புகளை அறிக்கையின் வாயிலான பாராட்டி வருகிறார். இது தமிழக அரசியல் களத்தில் நாகரீக மலர்ச்சியில் அடையாளர் என்று கூறிக் கொண்டாலும்கூட, முற்றிலும் இயல்புக்கு மாறானதாக இருந்து வருவது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுப்பதாக இருந்து வருவது குறிப்பிடதக்கது.