ஊழல் முகத்தை மறைக்கவே பரதன் வேஷம் போட்டு ஏமாற்றும் ஓபிஸ்.. துணை முதல்வரின் முகத்திரையை கிழித்த ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Feb 18, 2021, 4:24 PM IST
Highlights

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா, சசிகலா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி யாருக்கும் உண்மையாக இல்லை என  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா, சசிகலா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி யாருக்கும் உண்மையாக இல்லை என  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கோகிலாபுரம் விளக்கு பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மக்களிடம் குறைகளை கேட்டறிந்த  ஸ்டாலின் அதனை மனுவாகவும் பெற்றுக்கொண்டார். பின்னர், பேசிய மு.க.ஸ்டாலின்;- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் யாருக்கும் உண்மையாக இல்லை! ஜெயலலிதாவுக்கு உண்மையாக இருக்கிறாரா? இல்லை! அவருக்கு இரண்டு முறை முதலமைச்சர் பதவி கொடுத்தவர் ஜெயலலிதா. அந்த ஜெயலலிதாவுக்கும் உண்மையாக இல்லை. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்று தர்மயுத்தம் நடத்திய பன்னீர்செல்வம், பழனிசாமியுடன் சேர்ந்தார். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை இதுவரை தீர்க்கவில்லை. மூன்றாவது முறை அவருக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தவர் சசிகலா. அவருக்கும் உண்மையாக இல்லை. அவரை எதிர்த்தே தனியாக போனார்.

அடுத்து பழனிசாமியிடம் போய் சேர்ந்து துணை முதலமைச்சர் ஆனார். இப்போது அவருக்கும் உண்மையாக இல்லை. தான் முதலமைச்சர் ஆவதற்காக பழனிசாமியை எதிர்த்துக் கொண்டு இருக்கிறார்! ஊரை ஏமாற்றுவதற்காக 'அயோத்திக்கு கிடைத்த பரதனைப் போல தமிழகத்துக்கு கிடைத்த ஓ.பி.எஸ்' என்று விளம்பரம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். ராமன், பரதன்,அயோத்தி என்று சொன்னால் தான் பாஜகவுக்கு புரியும் என்பதால் இப்படி விளம்பரம் கொடுக்கிறார். இவர் பரதன் என்றால் அதை பக்தர்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அயோத்தியைப் பற்றி பேசுவதற்கு பன்னீர்செல்வத்துக்கு அருகதை இருக்கிறதா? என்பது தான் முக்கியமான கேள்வி!

கடந்த மாதத்தில் போடியில் கிராம சபை கூட்டம் நடத்தினேன். அதில் கலந்து கொண்ட ஒரு பெண், பன்னீர்செல்வம் மீதான கோபத்தை வெளிப்படுத்தினார். அப்போது உணர்ச்சிவசப்பட்டு ஒரு வார்த்தையை பயன்படுத்தினார். உடனே அதை வாபஸ் வாங்கச் சொன்னேன். அவரும் வாபஸ் வாங்கிவிட்டார். இப்போது அவர் மீது வழக்குகள் போடப்பட்டிருக்கிறது. இதுதான் பன்னீர்செல்வத்தின் ஜனநாயகம். இதைப் பார்த்த பன்னீர்செல்வம் என்ன செய்திருக்க வேண்டும்?

அந்தப் பெண் சொன்ன கோரிக்கை என்ன என்று கவனித்திருக்க வேண்டும். உண்மையான பரதனாக இருந்திருந்தால் அதைத் தான் செய்திருப்பார். ஆனால் கூனியின் பாத்திரத்துக்கு பொருத்தமான பன்னீர்செல்வம் என்ன சொல்லி இருக்கிறார் என்றால் பணம் கொடுத்து அந்தப் பெண்ணை நான் பேச வைத்தேன் என்று சொல்லி இருக்கிறார். இதுதான் பன்னீர்செல்வத்தின் மூளை. இப்படித்தான் குறுக்கு வழியில் யோசிக்கும். 'ஸ்டாலின் போய் கிராமசபைக் கூட்டத்தில் சம்மணம் போட்டு உட்காருகிறார். நான் கூட அவர் இலை போட்டு சாப்பிடப் போகிறாரோ என்று பார்த்தேன்' என்று கிண்டல் செய்துள்ளார் பன்னீர். பன்னீர்செல்வத்துக்கு தெரிந்த ஒரே வேலை அது தான். அதனால் தான் தன்னைப் போலவே மற்றவர்களையும் நினைத்துக் கொள்கிறார்.

பன்னீர்செல்வம் திறமை இல்லாதவர் என்பதை நாம் சொல்லவேண்டியது இல்லை. ஜெயலலிதாவே சொல்லி இருக்கிறார். இன்றைக்கு துணை முதலமைச்சராக பன்னீர்செல்வம் இருக்கலாம். ஆனால் இந்த ஆட்சி மீது நம்பிக்கை இல்லை என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் வாக்களித்தவர் பன்னீர்செல்வம். அப்படி வாக்களித்த 11 பேரில் ஒருவர். சட்டப்படி பார்த்தால் அவர் துணை முதலமைச்சராக இருக்க முடியாது. ஏன் எம்.எல்.ஏ.,வாகக் கூட இருக்க முடியாது. நாங்கள் தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று முதலில் சொன்னது யார்? ஜெயலலிதா சமாதியில் போய் தியானம் செய்து ஆவியோடு பேசியது யார்? தர்ம யுத்தம் நடத்துவதாகச் சொன்னது யார்? இந்த தர்ம யுத்தத்தை திடீரென்று ஒருநாள் வாபஸ் வாங்கிவிட்டு எடப்பாடியுடன் கை கோர்க்க, கை மாறியது என்ன? ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றால், அந்த மர்மத்தில் பன்னீருக்கும் பங்கு இல்லையா? அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது சசிகலாவும் தினகரனும் பன்னீர்செல்வமும் பழனிசாமியும் ஒன்றாகத் தானே இருந்தார்கள்? இவர்களுக்குத் தெரியாமல் என்ன நடந்திருக்க முடியும்? இன்றைக்கு உங்களுக்குள் பிரிந்து போய்விட்டீர்கள் என்றால் அதற்காக கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்கு பங்கு இல்லை என்று ஆகிவிடுமா?

சசிகலா, இளவரசி, சுதாகரன் சொத்துக்கள் முடக்கப்படுகிறது என்றால் அவர்களுக்கு அப்போது வசூல் செய்து கொடுத்தவர்கள் யார்?  இந்த பழனிசாமியும் பன்னீரும் தானே? ஜெயலலிதா மரணம் அடையும் வரை, சசிகலா சிறைக்குப் போகும் வரை இவர்களிடம் கைகட்டி நின்றவர்கள் தானே பழனிசாமியும் பன்னீரும்? இன்றைக்கு பிரிந்து விட்டதால் உங்கள் இருவருக்கும் அவர்களது பாவத்தில் பங்கில்லை என்று ஆகிவிடுமா? இப்போதும் தன்னை நரேந்திர மோடி முதலமைச்சர் ஆக்கிவிட மாட்டாரா?  சசிகலா முதலமைச்சர் ஆக அறிவித்துவிட மாட்டாரா என்று துடிக்கிறார் பன்னீர்செல்வம்!

இத்தனை ஆண்டு காலம் இந்த நாட்டுக்கோ, நாட்டுமக்களுக்கோ, இந்த வட்டாரத்து மக்களுக்கோ, தனது தொகுதி மக்களுக்கோ எந்த நன்மையும் செய்யாத பன்னீர்செல்வம், இனியும் தேர்தலில் வெற்றி பெற்று என்ன செய்யப் போகிறார்? சும்மா தான் இருக்கப் போகிறார். அத்தகைய பன்னீர்செல்வம், வீட்டில் சும்மா இருக்கட்டும் என்று மக்கள் தக்க பாடம் கற்பிக்கக் காத்திருக்கும் தேர்தல் தான் இந்த தேர்தல்!

தனக்குக் கிடைத்த செல்வாக்கை வைத்துக் கொண்டு ஓ.பன்னீர்செல்வமும் அவர் தம்பி ஓ.ராஜாவும், பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தும் செய்த அதிகாரங்கள், அதிகார துஷ்பிரயோகங்கள், ஊழல்கள், அநியாயங்கள் ஆகியவற்றை பட்டியலிட்டால் அதற்கு நேரம் போதாது என்றார். பழனிசாமியும் பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. வேட்பாளர்களும் தோற்கப் போகிறார்கள். தோற்கடிக்கப்பட வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். அது மக்களின் வெற்றியாக அமையும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

click me!