
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கல்வி, பொருளாதார மேம்பாட்டுப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில், அமைச்சர் செஞ்சி மஸ்தான், செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு தேவையான தரமான உணவுகளை வழங்க வேண்டும், மிதிவண்டிகளை கல்வியாண்டின் துவக்கத்திலேயே மாணவர்களுக்கு வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தினார். மேலும், 69% இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்ற வழக்குகள் விசாரணைக்கு வரும் போது, மூத்த வழக்கறிஞர்களை நியமித்து 69% இடஒதுக்கீட்டினை பாதுகாத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதேப்போல் வன்னிய சமுதாய மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% இட ஒதுக்கீடு வரும் காலங்களில் தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், அரசு கல்வி நிறுவனங்களில் உயர் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு முதல் முறையாக அமல்படுத்தப்பட உள்ளதோடு, விரைவில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு நடைமுறைகளிலும் இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.