
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகலா மற்றும் தினகரனின் பேனர்கள் இன்று அகற்றப்பட்டன.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுப்பட்டதால் தேர்தல் ஆணையம்இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்துள்ளது. அதிமுகவுக்கு மீண்டும் இரட்டை இலைசின்னம் கிடைக்க இரு அணிகளும் ஒன்றாக இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இரு அணிகளும் இணைவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சசிகலா குடும்பத்தினரை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டும், ஜெ மரணம் தொடர்பான நீதி விசாரணை நடத்த வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் நிபந்தனை விதித்துள்ளனர்
இதே போன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள சசிகலா மற்றும் தினகரனின் படங்கள் மற்றும் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை விடுத்திருந்தனர். மதுசூதனனும் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஆனால் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பேனர்கள் அகற்றப்படமாட்டாது என உறுதியாக தெரிவித்தார். அதே நேரத்தில் நேற்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக முடிவெடுத்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகலா மற்றும் தினகரனின் பேனர்கள் அகற்றப்பட்டன.
சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் இணைவது உறுதி ஆகிவிட்டது என்றே தோன்றுகிறது.