பொதுச் செயலாளர் என்பதெல்லாம் கட்சியினருக்குத்தான்…எங்களுக்கு சசிகலா சாதாரண கைதி…கெத்து காட்டும் பெங்களூரு சிறை நிர்வாகம்…

First Published Apr 1, 2017, 7:08 AM IST
Highlights
bangalore jail


பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு, சிறப்பான சலுகைகள் எதையும் வழங்கவில்லை என  பெங்களூரு சிறைத்துறை ஐ.ஜி., வீரபத்திரசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அஹ்ரகாரா சிறையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி,சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், வெளியில் இருந்தது உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து இது குறித்து விளக்கம் அளித்த பெங்களூரு சிறைத்துறை ஐ.ஜி., வீரபத்திரசாமி, கர்நாடகாவைப் பொறுத்த வரையில், சிறைக்கு வந்து விட்டால், சிறை விதிகள் என்ன சொல்கிறதோ, அதைத்தான் பின்பற்றுவோம் என்றும் சிறப்பான சலுகைகள் எதையும் வழங்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

அதிமுக  பொதுச் செயலர் சசிகலாவுக்கு மட்டும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக, சொல்லப்படுவது தவறு என்றும்  எல்லோருக்கும் என்னென்ன சலுகைகள் வழங்கப்படுகிறதோ, அதுதான் அவருக்கும் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

சிறையில், சசிகலாவும், இளவரசியும் ஒரே அறையில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. சசிகலாவை சிறையில் சந்திக்க, கட்சியினர் நிறைய பேர் வருகின்றனர். அவர்கள் பற்றிய விவரங்கள் சசிகலாவுக்கு அளிக்கப்படுகிறது. அதில் யாரையெல்லாம் சந்திக்க விரும்புகிறாரோ, அவர்கள் மட்டுமே, சசிகலாவை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர். என வீரபத்ரசாமி தெரிவித்தார்



வெளியிலிருந்து கொண்டு வரப்படும் வீட்டு உணவு, சசிகலாவுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படுவதிலும் உண்மையில்லை என்றும் மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் உணவே, அவருக்கும் வழங்கப்படுவதாக அவர் கூறினார்.

பெங்களூரு சிறை நிர்வாகத்தைப் பொறுத்தவரை  எல்லா கைதிகளைப் போலத்தான் சசிகலாவும். அவர், அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர் என்பதெல்லாம், அவரது கட்சியினருக்கு மட்டும்தான் என உறுதிபடத் தெரிவித்தார்.

சசிகலாவை வேறு சிறைக்கு மாற்றுவதாக  தொடர்பாக இதுவரை, எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை என்றும்  சிறையில், சசிகலாவுக்கு முழுமையான பாதுகாப்பு உள்ளது. என்றும் பெங்களூரு சிறைத்துறை ஐ.ஜி., வீரபத்திரசாமி  தெரிவித்தார்.

click me!