வேளச்சேரியில் பைக்கில் வாக்கு இயந்திரங்கள்.. ஒரு வாக்குச்சாவடியில் மறுதேர்தல்.. தேர்தல் ஆணையம் அதிரடி.!

By Asianet TamilFirst Published Apr 13, 2021, 9:38 PM IST
Highlights

சென்னை வேளச்சேரி தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை பைக்கி எடுத்து சென்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 

சென்னையில் வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட தரமணி 100அடி சாலையில் தேர்தல் தினத்தன்று இருசக்கர வாகனத்தில் சிலர் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றனர். இதைக் கண்ட திமுகவினர், பொதுமக்கள் உதவியுடன் அவர்களை மடக்கிப்பிடித்தனர். இதனையடுத்து காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவத்துக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானா மற்றும் திமுக கூட்டணிக் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
இந்தச் சம்பவம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சரத்பாபு உள்ளிட்டவர்கள் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவை சந்தித்து புகார் அளித்தனர். இதனையடுத்து இந்தச் சம்ப்வம் தொடர்பாக விசாரித்த தேர்தல் ஆணையம், அஜாக்கிரதையாக மாநகராட்சி ஊழியர்கள் வாக்கு இயந்திரங்களை எடுத்துச் சென்றதாகவும், அந்த வாக்கு இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகியிருந்ததாகவும் தேர்தல் அதிகாரி சாஹூ தெரிவித்திருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கும் மாநில தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்பினார்.
இந்நிலையில் வேளச்சேரி தொகுதியில் வாக்குச்சாவடி எண் 92-ல் ஏப்ரல் 17 அன்று மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. ஏப்ரல் 17 காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த வாக்குப்பதிவு நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!