அமைச்சர் கனவில் இருந்தவர்..! எம்எல்ஏ ஆக துடித்தவர்..! திமுகவின் 2 மாநிலங்களவை எம்பி வேட்பாளர்கள் பின்னணி..!

By Selva KathirFirst Published Sep 15, 2021, 1:02 PM IST
Highlights

கொங்கு மண்டல திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த கே.ராமசாமியின் பேரன் ராஜேஸ்குமார். நாமக்கல் மாவட்ட திமுக ஆக்டிவாக இருக்க ராஜேஸ்குமார் மிக முக்கிய காரணம். கொங்கு மண்டலத்தில் திமுக மானம் காத்த மாவட்டம் நாமக்கல் தான். மற்ற கொங்கு மாவட்டங்களை விட நாமக்கல்லில் திமுக கூடுதல் தொகுதிகளை வென்றது. அத்துடன் நாமக்கல் தொகுதியில் போட்டியிட ராஜேஸ்குமார் தீவிர களப்பணிகளை செய்து வைத்திருந்தார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கட்சிக்காக சம காலத்தில் உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கி வரும் மு.க.ஸ்டாலின் தற்போது கட்சிக்காக பாரம்பரியாக உழைத்த குடும்பத்திற்கு அங்கீகாரம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

தமிழகத்தில் மூன்று ராஜ்யசபா எம்பி பதவி இடங்கள் காலியாக இருந்த நிலையில் ஒரு பதவிக்கு எம்எம் அப்துல்லாவை வேட்பாளராக்கி அவரை போட்டியின்றி வெற்றி பெறச் செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கட்சிக்காக சமூக வலைதளங்களில் மிக அதிகமாக களப்பணியாற்றியவர் என்கிற முறையில் இவருக்கு இந்த அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் மேலும் 2 ராஜ்யசபா பதவிகளுக்கு கடந்த ஞாயிறன்று தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். இந்த இரண்டு பதவிகளும் எளிதாக திமுக வசம் செல்லும் என்பதால் யார் வேட்பாளர் என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால் திமுக முக்கிய நிர்வாகிகள் எதிர்பார்த்தது போலவே டாக்டர் கனிமொழியை வேட்பாளராக அறிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின். இவர் பாரம்பரிய திமுக குடும்பத்தை சேர்ந்தவர். கனிமொழியின் தாத்தா நடராசன், திமுகவின் முதல் முன்னோடித் தலைவர்களில் ஒருவர். அதாவது கட்சி துவங்கப்பட்ட போது அண்ணாதுரைக்கு உறுதுணையாக இருந்தவர். அத்துடன் முதல் சென்னை மாவட்டத் திமுக செயலாளரும் நடராசன் தான். மேலும் திமுகவின் முதல் அமைப்புச் செயலாளராகவும் பணியாற்றியவர் நடராசன். இவரது மகன் சோமு திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்.

அத்துடன் சோமு மத்திய அமைச்சர் பதவியிலும் இருந்தவர். இந்த சோமுவின் மகள் தான் டாக்டர் கனிமொழி. தற்போது இவர் திமுகவின் மருத்துவ அணி மாநிலச் செயலாளராக உள்ளார். கடந்த 2011ம் ஆண்டு முதலே கனிமொழி திமுகவில் எம்எல்ஏ பதவிக்கான போட்டியில் உள்ளார். கலைஞர் இருந்த போது மாதவரம் தொகுதியில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அங்கு படு தோல்வி அடைந்தார் கனிமொழி. பிறகு 2016 தேர்தலில் தியாகராயநகர் தொகுதியில் போட்டியிட போராடி வாய்ப்பு பெற்றார் கனிமொழி.

தியாகராயநகர் தொகுதியில் வெறும் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தார். அதன் பிறகு பெரம்பூர் இடைத் தேர்தல் நடைபெற்ற போது அங்கு போட்டியிட தீவிரம் காட்டினார். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதே போல் சட்டப்பேரவை தேர்தலில் சென்னையில் தியாகராயநகர், ஆயிரம் விளக்கு என ஒரு சில தொகுதிகளை குறி வைத்து கனிமொழி காய் நகர்த்தினார். ஆனால் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் மாநிலங்களவை வேட்பாளராக கனிமொழியை அறிவித்துள்ளார் ஸ்டாலின்.

இதே போல் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர்  ராஜேஸ்குமாருக்கு மாநிலங்களவை எம்பி பதவி கிடைத்துள்ளது. கொங்கு மண்டல திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த கே.ராமசாமியின் பேரன் ராஜேஸ்குமார். நாமக்கல் மாவட்ட திமுக ஆக்டிவாக இருக்க ராஜேஸ்குமார் மிக முக்கிய காரணம். கொங்கு மண்டலத்தில் திமுக மானம் காத்த மாவட்டம் நாமக்கல் தான். மற்ற கொங்கு மாவட்டங்களை விட நாமக்கல்லில் திமுக கூடுதல் தொகுதிகளை வென்றது. அத்துடன் நாமக்கல் தொகுதியில் போட்டியிட ராஜேஸ்குமார் தீவிர களப்பணிகளை செய்து வைத்திருந்தார்.

ஆனால் கடைசி நேரத்தில் அங்கு ராமலிங்கம் என்பவருக்கு போட்டியிட திமுக வாய்ப்பு கொடுத்தது. ஆனாலும் கூட மனம் கோணாமல் ராமலிங்கம் வெற்றிக்கு ராஜேஸ்குமார் கடுமையாக உழைத்தார். அத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்காவிற்கு கோவில் தொடர்பான அனைத்து உதவிகளும் செய்து வந்ததால் ராஜேஸ்குமாருக்கு நெருக்கம் என்கிறார்கள். கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட எந்த மாவட்டத்திற்கு, எந்த கோவிலுக்கு துர்கா வந்தாலும் ராஜேஷ்குமார் உடன் இருப்பார். மேலும் துர்காவிற்கு கோவில்களில் வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பவரும் ராஜேஷ்குமார் தான். அந்த வகையில் பாரம்பரியம் + செயல் வீரர் + மேலிடத் தொடர்பு என மூன்றும் சேர்ந்து ராஜேஷ்குமாரை மாநிலங்களவை எம்பி ஆக்கியுள்ளது.

ஆனால் ராஜேஷ்குமாரோ நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகும் கனவில் இருந்தவர். அந்த வகையில் எம்எல்ஏ கனவில் இருந்த கனிமொழி, அமைச்சர் கனவில் மிதந்த ராஜேஷ்குமார் ஆகியோருக்கு மாநிலங்களவை எம்பி பதவியை கொடுத்து அழகு பார்த்துள்ளார் ஸ்டாலின்.

click me!