ஆயுதபூஜை, விஜய தசமி இந்துக்கள் பண்டிகை இல்ல... பவுத்த பண்டிகைகள்... அடிமேல் அடி அடிக்கும் திருமாவளவன்.

By Ezhilarasan BabuFirst Published Oct 7, 2022, 1:54 PM IST
Highlights

விஜயதசமி என்பதும் ஆயுதபூஜை என்பதும் இந்துக்கள் பண்டிகைகள் அல்ல, அது  பவுத்த பண்டிகை என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

விஜயதசமி என்பதும் ஆயுதபூஜை என்பதும் இந்துக்கள் பண்டிகைகள் அல்ல, அது  பவுத்த பண்டிகை என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.  இதற்கு அவர் விளக்கம் கொடுத்து பேசியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

நாடு முழுவதும் இந்த ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. ஆயுதபூஜை பண்டியை  ஒவ்வொரு ஆண்டும் மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். கடந்த அக்டோபர் 4ஆம் தேதி நவமி தேதி அன்று ஆயுத பூஜையும், அக்டோபர் 5ஆம் தேதி தசமி திதியில் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்  மாநிலங்களிலும் இது கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாகவே கொண்டாடப்படுகிறது.

அதாவது ராமபிரான் மகிஷாசுரனை வெற்றி கண்ட நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த போருக்கு துர்க்கை தெய்வத்துக்கு ஆயுதங்களை வைத்து பூஜை செய்ததால் அது ஆயுதபூஜைக்கு என கூறப்படுகிறது. முழுக்க முழுக்க இந்து பண்டிகையாகவே அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் விஜயதசமி, ஆயுத பூஜை இரண்டும் இந்துக்கள் பண்டிகை அல்ல, அவைகள் பவுத்த பண்டிகைகள் ஆனால் அது பிராமணர்களால் இந்து பண்டிகையாக திரித்து கூறப்படுகிறது என குற்றம்சாட்டியுள்ளார். அதற்கான விளக்கத்தை அவர் கூறியுள்ளார். 

இதையும் படியுங்கள்: ஓட்டு வங்கிக்காக ஆன்மிக அரசியல் பேசும் ஸ்டாலின்.. முதலில் இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லுங்க.. VP.துரைசாமி

இது தொடர்பாக அவர் கூறியுள்ள விவரம் பின்வருமாறு:-  விஜயதசமி என்றால் வெற்றி பெற்று பத்தாவது நாள் என்று அர்த்தம்.  இது பவுத்த பண்டிகை, இது இந்து பண்டிகை அல்ல,  இதை பவுத்தர்கள் கொண்டாடினார்கள், இந்தியாவை ஆண்ட அசோக சக்கரவர்த்தி கலிங்க நாட்டின் மீது போர் தொடுத்தார். அப்போது பல்லாயிரக்கணக்கான வீரர்களைக் கொன்று குவித்தார், பல ஆயிரக்கணக்கானோரை சிறை பிடித்து வெற்றி வாகை சூடினார். இதனை அறிந்த உப குப்தா என்னும் புத்த துறவி ஒருவர் அசோகரை சந்தித்து, கலிங்கப் போரில் நீங்கள் அடைந்தது வெற்றி அல்ல தோல்வியே  என அரசனிடம் கூறினார்.

அதற்கு அரசர் எப்படி என விளக்கம் கேட்டார், நீர் போரிட்ட போர்க்களத்தை மீண்டும் ஒருமுறை திரும்பி சென்று பார்த்துவிட்டு வாருங்கள் என கூறினார். போர்க்களத்தை சென்று மன்னர் சுற்றிப் பார்த்தார், பல்லாயிரக்கணக்கான வீரர்கள் பிணமாகக் கிடந்தனர், ரத்தம் ஆறாக ஓடியது, கை கால்களை இழந்து வெட்டப்பட்டு கிடந்தனர். குத்துண்டு உயிருக்கு துடிப்பவர்களை அசோகச் சக்கரவர்த்தி பார்த்தார். போரில் இறந்து போனவர்களின் மனைவிகள், தாய்மார்கள், குழந்தைகள், உறவினர்கள் அழுது குழம்பித் தவித்தனர். அசோகச் சக்கரவர்த்தி தோல்வியை ஒப்புக் கொண்டதுடன் செய்த பாவத்திற்கு பரிகாரமாக இனிமேல் போர் செய்யும் செயலை அறவே விட்டுவிட்டு எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டுவேன் என சபதம் எடுத்தார்.

இதையும் படியுங்கள்: நாம் தமிழர் கட்சி நிர்வாகி வீட்டில் என்ஐஏ திடீர் சோதனை..! அதிர்ச்சியில் சீமான் ..! என்ன காரணம் தெரியுமா??

அப்போது போர் ஆயுதங்களை கழுவி தூய்மைப் படுத்தி அடுக்கிவைத்த அசோக மன்னர், இனி போர்தொடுக்க மாட்டேன், எவ்வுயிரையும் கொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்து புத்த பகவானை வழிபட்டார். இதுதான் ஆயுத பூஜை ஆக அன்று கொண்டாடப்பட்டது,  அன்று முதல் இன்று வரை ஆயுதம் களைதல் என்னும் பெயரால் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இனி எந்த காலத்திலும் யுத்தம் இல்லை என முடிவெடுத்த பத்தாவது  நாளை தான் விஜயதசமி என அன்று கொண்டாடப்பட்டது.

ஆனால் இன்று ஆயுதபூஜை என்றால் வீட்டில் உள்ள ஆயுதங்களை எடுத்து வைக்கிறார்கள், ஆனால் உண்மையிலேயே போர் ஆயுதங்களைத்தான் அன்று வைத்து வழிபட்டார்கள், ஆயுதங்கள் இனி ரத்தத்திற்காக பயன்படுத்தக்கூடாது என நினைவு கூறுவதற்காக அது கொண்டாடப்பட்டது. போர்த் தொழிலைக் கைவிட்ட உடன் அதன் பிறகு என்ன? கல்விதான்...  கல்வியை நோக்கிதான் நாம் சென்று கொண்டு இருக்கிறோம். ஆனால் இன்று வரலாறு திரிக்கப்படுகிறது, ஹிந்து பண்டிகையாக அது மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசியுள்ளார். 
 

click me!