கீழடி ஆய்வுக்கு நிலம் கொடுத்தவர்களை ஸ்டாலினை சந்திக்க விடாமல் தடுத்த அதிகாரிகள்..!

By Thiraviaraj RMFirst Published Nov 11, 2021, 6:49 PM IST
Highlights

கீழடி அகழாய்வுக்கு சொந்த நிலத்தை கொடுத்தவர்களுக்குப் பட்டா வழங்க அலைக்கழித்து வருவதோடு முதல்வரிடம் புகார் கொடுக்க அவர்கள் முயற்சித்ததையும் அதிகாரிகள் தடுத்ததாக கூறப்படுகிறது. 

கீழடி அகழாய்வுக்கு சொந்த நிலத்தை கொடுத்தவர்களுக்குப் பட்டா வழங்க அலைக்கழித்து வருவதோடு முதல்வரிடம் புகார் கொடுக்க அவர்கள் முயற்சித்ததையும் அதிகாரிகள் தடுத்ததாக கூறப்படுகிறது. 

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் அகழாய்வுப் பணிக்கென 2019-ல் அந்தக் கிராமத்தை சேர்ந்த சிலர் இலவசமாக நிலங்களை வழங்கினர். குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு அந்த நிலங்கள் சீரமைக்கப்பட்டு நில உரிமையாளர்களிடமே திரும்ப வழங்கப்பட்டன. நிலம் வழங்கியவர்களுக்குப் பட்டா மாறுதல் உள்ளிட்ட அவர்களின் கோரிக்கைகளை வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய ஆவணங்களைப் பெற்று, துரிதமாகச் செய்து தரவேண்டும் என, அரசு செயலர் உதயச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஏற்கெனவே  வருவாய்த் துறையினருக்கு அறிவுறுத்தினர்.

இந்நிலையில், அகழாய்வுக்கு நிலம் கொடுத்த கொந்தகையைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன்கள் மனோகரன், கருமுருகேசன், ஆண்டிச்சாமி, முத்துராஜா ஆகியோர் பட்டா மாறுதல் செய்து கொடுப்பதில் தாமதம் செய்து, அவர்களை அலைக்கழிப்பு செய்வதாக புகார் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ’’அகழாய்வுக்கு நிலம் கொடுக்க ஒப்பந்தம் செய்தபோது, எங்களுக்கான பட்டா மாறுதல் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என அரசுத் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. நாங்கள் 5 ஏக்கர் நிலம் கொடுத்தோம். இருப்பினும், எங்களது ஊரில் குறைவாக நிலம் கொடுத்த சிலருக்கும் பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் துரிதமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. கூட்டுப் பட்டாவிலுள்ள எங்களுக்கான 5 ஏக்கர் நிலத்தைப் பாகப் பிரிவினை செய்து, தனித்தனியே பட்டா மாறுதல் செய்து கொடுக்கப் பலமுறை முயன்றும் அதிகாரிகள் கேட்கவில்லை. 

கடந்த மாதம் 29-ம் தேதி முதல்வர் கீழடிக்கு வந்தபோது, அவரிடம் நேரில் மனு கொடுக்கத் திட்டமிட்டு இருந்தோம். இதை அறிந்த உளவுத்துறையினர் முதல்வரைச் சந்திக்க உரிய ஏற்பாடுகளைச் செய்தனர். கடைசி நேரத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், திருப்புவனம் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் பட்டா மாறுதல் போன்ற எங்களது கோரிக்கையை ஓரிரு நாளில் முடித்துத் தருவதாகக் கூறியதால் முதல்வரின் சந்திப்பைத் தவிர்த்தேன். உளவுத்துறையினர் கூட என் மீது அதிருப்தி தெரிவித்தனர்’’ என்று அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து வட்டாட்சியர் ரத்தினவேல்பாண்டியன், ''கருமுருகேசன் குடும்பத்தினருக்கான கோரிக்கை பரிசீலனையில் உள்ளது. அவர்கள் பட்டா மாறுதலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணம் பதிவில்லாத ஆவணமாக இருப்பதால் விசாரித்து நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்'' என்று தெரிவித்தார்.

click me!