chennai flood மழைக்கு ஒருத்தர் கூட சேவை செய்ய வரவில்லை..? 2015 தன்னார்வலர்கள் எங்கே..? பகீர் காரணம்..!

By Thiraviaraj RMFirst Published Nov 11, 2021, 5:10 PM IST
Highlights

நீங்கள் வன்முறை கட்சி என்று தன்னார்வ நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும் உறங்கிவிட்டனர்

தாங்கள் மட்டுமே சேவை செய்து பெயர் எடுக்க வேண்டும். இல்லையென்றால் திமுககாரர்கள் அடிப்பார்கள் என பயந்து கொண்டுதான் இந்த பெரு மழைக்காலத்தில் யாருமே சேவை செய்ய முன்வரவில்லை என பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது, தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், என்.ஜி.ஓக்கள் என பலரும் தாங்களாகவே முன் வந்து பொதுமக்களுக்கு அதிக அளவில் உதவிகளை செய்தனர். ஆனால், அதே போன்று பெருமழை சென்னையில் தற்போது பெய்து கொண்டிருக்கிறது. ஆனால் பொதுமக்களுக்கு சேவை செய்ய யாரும் முன்வரவில்லை. ஏன் அவர்கள் எங்கே போனார்கள்? 

இதற்கு விளக்கமளித்துள்ளார் முன்னாள் காவல்துறை அதிகாரியும், வழக்கறிஞருமான வரதராஜன். ’’மக்களுக்கு அரசாங்கத்தின் மீது ஒரு நம்பிக்கை வரவேண்டும். சென்னை கார்ப்பரேஷன் மூலம் தான் சென்னை நகரம் முழுவதும் உள்ள தேங்கிக் கிடக்கிற நீர்நிலைகளை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். நீரை வெளியேற்றி கொண்டிருக்கிறார்கள். ஆனால், சென்னை மாநகர அலுவலகமான ரிப்பன் பில்டிங் முன்னாலேயே முழங்கால் அளவு தண்ணீர் நிரம்பி கிடக்கிறது. 
கார்ப்பரேஷன் அலுவலகமான ரிப்பன் பில்டிங்கிலேயே முழங்கால் அளவு தண்ணீர் நிற்கும்போது மக்களுக்கு சந்தேகம் தானே அதிகரிக்கும். அதிகாரிகள் மீது எப்படி  நம்பிக்கை வரும்? மக்களுக்கு முதலில் நீங்கள் நடவடிக்கை எடுக்கிறீர்கள் என்பதில் நம்பிக்கை வரவேண்டும். ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் இரண்டுமுறை எம்.எல்.ஏ.,வாக இருந்திருக்கிறார்.

அங்குதான் அதிகமான தண்ணீர் நிரம்பி கிடக்கிறது. அப்படியானால் இரண்டு முறை இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த மு.க.ஸ்டாலின் மழை நீர் தேங்காமல் இருக்க என்ன நடவடிக்கை எடுத்தார்? அதற்கடுத்து பார்த்தால் சேப்பாக்கம் தொகுதி. கருணாநிதி இரண்டு மூன்று தடவை நின்று அங்கு வென்ற தொகுதி. அங்கிருந்து தான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அங்கு அதிகம் தண்ணீர் நிற்கிறது என்றால் கருணாநிதி எம்எல்ஏ வாக இருக்கும் போதும் சரி, முதலமைச்சராக இருக்கும்போதும் சரி, அங்கு இந்தப் பிரச்சினைக்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தானே அர்த்தம்?

சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அவர் வீடு வீடாகச் சென்று சேவை செய்வதை போட்டோக்கள் வீடியோக்கள் எடுத்து பெருமையாக காட்டினார்கள். உதயநிதி ஸ்டாலின் இப்போது மழையின் போது ஒரு வீட்டிற்குள் முழங்காலளவு தண்ணீரில் ஒரு பெரியவருடன் இருக்கும் போட்டாவை மட்டும் பகிர்ந்தார். அதன்பிறகு அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. சென்னை வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. சேப்பாக்கம் தொகுதி முழுவதும் கண்ணீர் திரண்டு நிற்கிறது. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை கூட்டிக்கொண்டு பெங்களூருக்கு சென்று புனித் ராஜ்குமார் இறந்த துக்கத்தை விசாரிக்க போய் விட்டார். எந்த நேரத்தில் தொகுதியை கண்காணிக்க வேண்டுமோ அந்த நேரத்தில் தொகுதியை கண்காணிக்க வேண்டும். 

நீங்கள் மே மாதம் ஆட்சிக்கு வந்தீர்கள். அக்டோபர் 15ல் இருந்து நவம்பர் 15 வரை வடகிழக்கு பருவமழை வந்துவிடும். அப்படி நாம் முன்பு எதிர்பார்த்தால்  3 மாசத்துக்கு முன்னாடியே அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அனைத்து அரசாங்கங்களும் மூன்று மாதங்களுக்கு முன்பே சாக்கடை கழிவு நீர்களை சுத்தம் செய்து வைத்துவிடுவார்கள். சென்னை இந்தளவுக்கு தண்ணீரில் மூழ்க அடிப்படைக் காரணமே நீங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வில்லை என்பதுதான்.
 
2015 இல் இதே அளவு மழை பெய்தது. ஆனால் அதை இரண்டு மூன்று நாட்களில் ஜெயலிதா சரி செய்தார். அதிகாரிகளை வைத்து திறம்பட கையாண்டார். 2015 இல் இதே சென்னையில் தான் பார்த்தேன். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என்.ஜி.ஓக்கள் என பலரும் வீட்டுக்கு வந்து மெழுகுவர்த்தி கொடுத்தார்கள், சாப்பாடு பொட்டலம் கொடுத்தார்கள். அத்தியாவசிய பொருள் கொடுத்தார்கள். பால் கொடுத்தார்கள். ஆனால் இப்போது யாருமே முன்வரவில்லை. அவர்கள் எங்கே சென்றார்கள்? என்ற கேள்வியும் பொதுமக்களிடம் எழுந்திருக்கிறது. 


ஆனால் அதற்கு காரணம் திமுக தான். திமுக ஒரு வன்முறை கட்சி. தாங்கள் மட்டுமே சேவை செய்து பேர் எடுக்க வேண்டும். இல்லையென்றால் திமுககாரர்கள் அடிப்பார்கள் என பயந்து கொண்டுதான் யாருமே சேவை செய்ய முன்வரவில்லை. பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தலைவர் அண்ணாமலை கொளத்தூர் தொகுதியில்  வெள்ள நிவாரண சேவை செய்யும் போது அவருடன் சென்றவர்களை அமைச்சர் சேகர்பாபு மிரட்டியுள்ளார். நீங்களும் செய்ய மாட்டீர்கள். மற்றவர்களையும் செய்ய விட மாட்டீர்கள். நீங்கள் வன்முறை கட்சி என்று தன்னார்வ நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும் உறங்கிவிட்டனர்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

click me!