ராணுவச்சிறையில் ஆங் சான் சூகி... கலக்கமடையும் இந்தியா..!

By Thiraviaraj RMFirst Published Dec 7, 2021, 4:45 PM IST
Highlights

மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த பொதுத் தேர்தலில் ஆங்சான் சூகியின் கட்சி வெற்றிப் பெற்று ஆட்சியைப் பிடித்தது.

மியான்மர் தேசத்தின் எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு, நாட்டை முன்னேற்றுவதற்கான அனைத்து தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என இந்தியா சார்பில் கூறப்பட்டுள்ளது. 

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த பொதுத் தேர்தலில் ஆங்சான் சூகியின் கட்சி வெற்றிப் பெற்று ஆட்சியைப் பிடித்தது.

ஆனால் தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக கூறி, ஆங்சான் சூகி கட்சியின் அரசை கடந்த பிப்ரவரி மாதம் 1ம் திகதி  அந்த நாட்டு ராணுவம் கவிழ்த்தது. இதையடுத்து மியான்மர் மக்கள் ராணுவ ஆட்‌சியை ஏற்க மறுத்து வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ஆங்சான் சூகி உள்ளிட்ட பலரை வீட்டு காவலில் அடைத்தது ராணுவம். எம்.பி.க்கள், கட்சி பிரதிநிதிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து தேர்தலின்போது சட்ட விரோதமாக வாக்கி டாக்கி வாங்கியது, தேசத்துரோகம், ரகசிய சட்டத்தை மீறியது, சட்ட விரோதமாக தங்கம் பெற்றது, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்காததன் மூலம் தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தை மீறியது எனப் பல வழக்குகள் ஆங் சான் சூகி மீது தொடரப்பட்டன. பிறகு மியான்மர் நாட்டு நீதிமன்றம் நேற்று ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் அவரது நிலவரம் அறிந்து அதை இரண்டு ஆண்டுகளாக குறைத்துள்ளது அந்நாட்டு ராணுவம்.

 

இந்நிலையில், ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து கவலையளிப்பதாக இந்திய வெளியுறவுத்துறைக்கான செய்தி தொடர்பாளர்  அரிந்தம் பாக்சி கூறுகையில், ‘’மியான்மரில் ஆங் சான் சூகிக்கு சிறைத் தண்டனை உள்பட சமீபத்திய தீர்ப்புகளால் நாங்கள் கலக்கமடைந்து உள்ளோம். அண்டை நாடான மியான்மரில் ஜனநாயக மாற்றத்திற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

சட்ட விதி மற்றும் ஜனநாயக செயல்முறை நிலைநாட்டப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த செயல்முறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மற்றும் வேறுபாடுகளை வலியுறுத்தும் எந்தவொரு வளர்ச்சியும் ஆழ்ந்த கவலைக்குரியது. மியான்மர் தேசத்தின் எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு, நாட்டை முன்னேற்றுவதற்கான அனைத்து தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’’ என அவர் தெரிவித்தார்.

click me!