
ஆளுநர் வானகத்தில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள் துறை அமைச்சகம் தலையிட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆளுநர் வருகை
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இன்று ஞானரத யாத்திரை புறப்பட்டார். இந்த நிகழ்வை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைப்பதற்காக மயிலாடுதுறைக்கு சென்றார். ஆளுநர் ஆர்.என் ரவியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் முன்னேறி வராதபடி 3 தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டன.
கொடிக் கம்புகள் வீச்சு
என்றாலும் ஆளுநர் வந்தபோது அவருடைய வாகனம் மீது கொடி கம்புகள் வீசப்பட்டன. மேலும் கற்கள் வீசப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. ஆனால், ஆளுநர் அணிவகுப்பில் கொடி கம்புகள், கற்கள் எதுவும் வீசப்படவில்லை என்று தமிழக போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் ஆளுநருக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சுமார் 150க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆளுநர் வானகத்தின் மீது கொடி கம்பு வீசி நடந்த இந்தப் போராட்டத்துக்கு அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆளுநர் வாகனத்தில் கற்கள் வீசப்பட்டதாக கண்டனம் தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘இதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும் அல்லது மன்னிப்பு கோர வேண்டும்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.
அமித் ஷாவுக்கு கடிதம்
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அண்ணாமலை எழுதியுள்ள இந்தக் கடிதத்தில், ‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆளுநரின் வாகன அணிவகுப்பில் கற்கள், கொடிகள், தண்ணீர் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள் துறை அமைச்சகம் தலையிட வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் அண்ணாமலை தெரிவித்துள்ளதாக பாஜக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.