
அண்மைக்காலமாக தொலைக்காட்சிகளில் அடிக்கடி தலையை காட்டி கொண்டிருக்கும் ஜோதிடர் ஷெல்வீ. ரஜினியின் அரசியல் பிரவேசத்தை யாரும் தடுக்க முடியாது என்றும் அவர் கூறி உள்ளார்.
அடுத்த ஆண்டு ஜனவரி 31 ம் தேதியுடன், ரஜினிக்கு சனி திசை முடிந்து, புதன் திசை தொடங்குகிறது. அப்போது அவர் அரசியலுக்கு வருவார் என்று அவர் கூறியது, தந்தி டி.வி யில் ஒளிபரப்பானது. தினமலரிலும் வெளியாகி உள்ளது.
ஆனால், இதற்கு முன்னாள் ஜோதிடர் ஷெல்வீ சொன்ன எந்த விஷயமும், நடக்கவில்லை என்று, நெட்டிசன்கள் தொடர்ந்து மீம்ஸ் போட்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் அந்த மீம்ஸ்கள் வைரலாக பரவி வருகின்றன.
அந்த மீம்ஸ்களின் படி வெளியான தகவல்களை பார்த்தால், அவர் சொல்வது எதுவுமே பலிக்கவில்லை என்றே தெரிகிறது.
கடந்த 2015 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ம் தேதி அவருடைய பேட்டி தந்தி டி.வி யின் கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது.
அப்போது, வரும் ஜனவரி 29 ம் தேதிக்குள், மிகப்பெரிய பாதிப்பு வரும் அதனால், மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், வரும் சித்திரை மாதத்திற்கு மேல், குஜராத் மற்றும் டெல்லியில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும் என்றும் அதே பேட்டியில் கூறினார். ஆனால், அவர் சொன்ன இரண்டுமே நடந்தது போல தெரியவில்லை.
அதன் பின்னர், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது, அவர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்று கூறினார். ஆனால், ஜெயலலிதா உயிரோடு திரும்பவில்லை. அதை கேலி செய்யும் மீம்ஸ்களும் வலைத்தளங்களில் வெளிவந்துள்ளன.
அடுத்து, தற்போது, ரஜினி அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறி அவர் இருக்கிறார். ஏற்கனவே, சொன்னதெல்லாம் நடந்து விட்டது? எனவே இதுவும் நடந்து விடும்.. என்று நக்கலாக மீம்ஸ் போட்டுள்ளனர் நெட்டிசன்கள்.
இதுகுறித்து, மற்ற சில ஜோதிடர்கள் கூறும்போது. ரஜினிக்கு திருவோணம் நட்சத்திரம், மகர ராசி. மகர ராசிக்கு அதிபதியாக உள்ள சனி பகவானே, இரண்டாம் வீடான கும்பத்திற்கு அதிபதியாகி பாதகத்தை செய்பவராக இருக்கிறார்.
அதனால், சர ராசியான மகரத்திற்கு, பாதக ஸ்தானமான, அதாவது, 11 ம் இடமான விருச்சிகத்திற்கு வந்து, மூன்றாம் பார்வையாக ராசியை பார்த்ததால், லிங்கா, கோச்சடையான் உள்ளிட்ட படங்களால் அவருக்கு சிக்கல் ஏற்பட்டது.
இனி, டிசம்பர் மாதத்தில் வரும் சனி பெயர்ச்சியின் மூலம், அவருக்கு மூன்றாவது ஏழரை சனி ஆரம்பமாகிறது. அதனால், அரசியலுக்கு வந்தாலும், அவரால் பெரிய அளவில் சாதிக்க முடியாது.
பொதுவாக திருவோணம் நட்சத்திரம், பெருமாளின் நட்சத்திரமாக இருப்பதால், அவர்கள் செல்வாக்கு பெற்றவர்களாக திகழலாமே ஒழிய, திருவோணம் நட்சத்திரத்தால், அரசியலில் பெரிய அளவில் சாதிக்க முடியாது என்றும் கூறுகின்றனர்.
வெறும் திசா புத்தியை மட்டுமே வைத்து எதையும் முடிவு செய்யக்கூடாது. கோச்சாரத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
அதனால், ரஜினி அரசியலுக்கு வருகிறாரா? சாதிக்கிறாரா? என்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஜோதிடர்கள் சொன்ன பலன்கள் இதுவரை பலித்திருக்கிறதா? என்றும் ஊடகங்கள் யோசிக்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.