பல தொகுதிகளில் அமமுகவை தோற்கடித்த நோட்டா... பரிதாபத்தில் டிடிவி.தினகரன்..!

By vinoth kumarFirst Published May 5, 2021, 2:16 PM IST
Highlights

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அமமுக வேட்பாளர்கள் நோட்டா வுக்கும் கீழ் வாக்குகளை பெற்றிருப்பது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அமமுக வேட்பாளர்கள் நோட்டா வுக்கும் கீழ் வாக்குகளை பெற்றிருப்பது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னற்ற கழகம், மக்கள் நீதி மய்யம் என ஐந்துமுனை போட்டியாக பிரச்சாரம் களை கட்டியது. ஆனால், தேர்தல் களத் தில் திமுக, அதிமுக இடையே நேரடி போட்டி இருந்தாலும் சில இடங்களில் அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பலத்த போட்டியை உருவாக்கினர். இந்த தேர்தலில் அமமுக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமமுக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் அக்கட்சியினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்தரிமேரூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காஞ்சிபுரம் அடுத்த அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில்,  ஸ்ரீபெரும்புத்தூரில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், மற்ற 3 தொகுதிகளில் திமுகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. காஞ்சிபுரம் தொகுதியில் அமமுகவை பின்னுக்குத் தள்ளி நோட்டா அதிக வாக்குகளை பெற்றுள்ளது. இந்த தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட மனோகரன் 2301 வாக்குகள் பெற்ற நிலையில் நோட்டாவுக்கு 2534 வாக்குகள் கிடைத்துள்ளது.  அதேபோல், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் அமமுக கூட்டணியில் போட்டியிட்ட எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் தமிமுன் அன்சாரி 1770 வாக்குகள் பெற்ற நிலையில் நோட்டாவுக்கு 1908 வாக்குகள் பதிவாகி உள்ளன. 

வேலூர் தொகுதியில் போட்டியிட்ட வி.டி.தர்மலிங்கம் நோட்டாவுக்கு விழுந்த 1,441 வாக்குகளை விட குறைவாக 865 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். காட்பாடி தொகுதியில் நோட்டாவுக்கு 1,889 வாக்குகள் கிடைத்த நிலையில் அமமுக வேட்பாளர் ஏ.எஸ்.ராஜா 1,066 வாக்குகள் மட்டும் பெற்றுள்ளார். அணைக்கட்டு தொகுதியில் நோட்டாவுக்கு 1,791 வாக்குகள் கிடைத்த நிலையில் அமமுக வேட்பாளர் சதீஷ்குமார் 1,140 வாக்குகள் பெற்றுள்ளார். குடியாத்தம் தனி தொகுதியில் நோட்டாவுக்கு 1,699 வாக்குகள் கிடைத்த நிலையில் அங்கு போட்டியிட்ட முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ஜெயந்தி பத்மநாபன் 1,810 வாக்குகள் பெற்று ஆறுதல் பெற்றுள்ளார்.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை தொகுதியில் நோட்டாவுக்கு 1,652 வாக்குகள் கிடைத்த நிலையில் அங்கு போட்டியிட்ட அமமுக வேட்பாளர் வீரமணிக்கு 637 வாக்குகள் மட்டுமே கிடைத் துள்ளது. அமமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக கே.வி.குப்பம் தொகுதியில் போட்டியிட்டது. அங்கு நோட்டா வாங்கிய 1,798 வாக்குகளுக்கும் குறைவாகவே தேமுதிக வேட்பாளர் தனசீலன் 1,432 வாக்குகள் மட்டும் பெற்றுள்ளார். இதேபோல், பல தொகுதிகளில் அமமுக நோட்டாவுக்கு கீழ் சென்றுள்ளது. 

click me!