ஆசிரியர்களிடம் ஒப்புக்குக் கருத்து கேட்பா? ஊரடங்கு தளர்வில் அரசியல் தலையீடு கூடாது: பழ.நெடுமாறன் வலியுறுத்தல்.

By Ezhilarasan BabuFirst Published Aug 25, 2020, 5:35 PM IST
Highlights

ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேசியக் கல்விக்கொள்கையின் நகல் திட்டம் வெளியிடப்பட்ட போது ஆசிரியர் அமைப்புகளும், கல்வியாளர்களும் தெரிவித்த கருத்துக்கள் எதனையும் அரசு ஏற்கவில்லை

“புதிய தேசியக் கல்விக்கொள்கை குறித்து பள்ளி ஆசிரியர்களும், முதல்வர்களும் கருத்தினை ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கலாம்” என மத்திய மனித வளமேம்பாட்டுத் துறையமைச்சர் அறிவித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆசிரியர்கள் கூடிப் பேசவும் தங்களுக்குள் விவாதிக்கவும் இயலாத கரோனா காலச் சூழ்நிலையில் அமைச்சரின் அறிவிப்பு வெறும் கண்துடைப்பாகும். 

ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேசியக் கல்விக்கொள்கையின் நகல் திட்டம் வெளியிடப்பட்ட போது ஆசிரியர் அமைப்புகளும், கல்வியாளர்களும் தெரிவித்த கருத்துக்கள் எதனையும் அரசு ஏற்கவில்லை. மேலும் புதியக்கல்வி திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என தலைமையமைச்சர் மோடி அறிவித்த பிறகு ஆசிரியரிடம் கருத்துக் கேட்பதில் எவ்விதப் பயனும் இல்லை. எனவே ஒப்புக்காக இவ்வாறு கேட்பது ஜனநாயக மரபுகளைக் குழிதோண்டிப் புதைப்பதாகும். மாணவர்களின் எதிர்காலத்தைக் கொஞ்சமும் எண்ணிப் பார்க்காமல் அவசர அவசரமாக புதிய கல்வித்திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு செய்யும் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் ஒன்று திரண்டு போராட முன்வருமாறு வேண்டிக்கொள்கிறேன் என நெடுமாறன் தெரிவித்துள்ளார். 

 

மேலும், தமிழ்நாட்டில் கொரோனா காலக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது அல்லது முற்றிலும் நீக்குவது குறித்து அறிவுரைக் கூறவேண்டிய பொறுப்பும், கடமையும் இதற்கென அமைக்கப்பட்டிருக்கும் மருத்துவ உயர்குழுவினர் மற்றும் உலக சுகாதார அமைப்பின் திட்டங்களுக்கான துணை இயக்குநர் பொறுப்பு வகிக்கும் சௌமியா சுவாமிநாதன் ஆகியோருக்குமே உரியது. எனவே அரசியல் தலைவர்களோ அல்லது அமைச்சர்களோ இதில் முடிவெடுக்க இயலாது. எனவே அதில் மேற்கண்டவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றியே முடிவுகளை எடுக்கவேண்டுமென முதலமைச்சரை வேண்டிக்கொள்கிறேன் என அவர் தனது மற்றொரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

click me!