இரவில் டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணம் பறிப்பு..!! வண்டலூரில் வழிப்பறி கும்பல் அட்டகாசம்..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 25, 2020, 5:21 PM IST
Highlights

வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் இருட்டான பகுதியில் மறைந்திருந்த இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தி உருட்டுக்கட்டையால் சரவணனனை தாக்கிவிட்டு பையில் வைத்திருந்த பணத்தை எடுத்துச் சென்றனர்.

வண்டலூர் அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கிவிட்டு 2 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் பணத்தை அபகரித்துச் சென்ற  நபர்களை ஓட்டேரி போலீசார் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம்  தாம்பரம் அடுத்த ஓட்டேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வண்டலூர் பகுதியில் நான்கு மதுபான கடைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் வண்டலூர் மேம்பாலம் சர்வீஸ் சாலையை ஒட்டி அமைந்துள்ள மதுபான கடையில் வழக்கம்போல இரவு 8 மணிக்கு டாஸ்மாக் கடையை மூடிவிட்டு மேற்பார்வையாளர் சரவணன் என்பவர் சர்வீஸ் சாலை வழியாக 9 மணி அளவில் மதுபானங்கள் விற்பனை செய்த 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயை பைபில் எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வண்டலூரை நோக்கி வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். 

அப்பொழுது வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் இருட்டான பகுதியில் மறைந்திருந்த இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தி உருட்டுக்கட்டையால் சரவணனனை தாக்கிவிட்டு பையில் வைத்திருந்த பணத்தை எடுத்துச் சென்றனர். சற்றும் எதிர்பார்க்காத இந்த சம்பவம் குறித்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் சரவணன், அருகே இருந்த ஒட்டோரி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். இது சம்பந்தமாக ஓட்டேரி காவல்துறையினர் முக்கிய சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர். தாக்கப்பட்ட டாஸ்மாக் ஊழியர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இதற்கு முன்னர் இது போல பல சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் நடந்துள்ள முதல் நிகழ்வாக இது கருதப்படுகிறது. ஏற்கனவே  பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் டாஸ்மாக் ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், அவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதும், போதை ஆசாமிகளால் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதும் வாடிக்கையாகிவருகிறது. மொத்தத்தில் அவர்களது பணிப்பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ள நிலையில், மதுபாட்டில்களை  விற்ற பணத்தை பத்திரமாக  அதிகாரிகளின் கையில் ஒப்படைக்கும் பொறுப்பும் அவர்களிடத்தில் இருப்பதால், அவர்கள் சமூக விரோத கும்பல்களால் குறிவைக்கப்படும் அபாயத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே உடனே அரசு இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுகிறது.  

 

click me!