
சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனம் செல்லாது என தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும். பின்னர், அதிமுக பொதுச்செயலாளராக ஓ.பி.எஸ் தேர்வு செய்யபடுவார் என மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக ஓ.பி.எஸ் அணி, சசிகலா அணி என இரண்டாக செயல்படுகிறது. சசிகலா அணி ஆட்சியை கைப்பற்றி இருந்தாலும் அது நிரந்தரம் அல்ல, விரைவில் ஆதிமுகவை மீட்டெடுப்போம் என ஓ.பி.எஸ் தரப்பினர் கூறி வருகின்றனர்.
இதற்கு பதிலளிக்குமாறு சசிகலாவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. சசிகலாவிற்கு பதிலாக சசிகலாவால் நியமிக்கப்பட்ட அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பதில் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், தினமும் மாவட்ட வாரியாக தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வரும் ஓ.பி.எஸ் இன்று திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார்.
அதிமுகவினர் ஓ.பி.எஸ் தலைமையிலான அரசையே விரும்புகின்றனர்.
மக்கள் விருப்பத்திற்கும், அதிமுக தொண்டர்கள் விருப்பத்திற்கும் மாறாக டி.டி.வி தினகரனை சசிகலா துணைப் பொதுச்செயலாளராக நியமித்து விட்டு சென்றுள்ளார்.
இதை தேர்தல் ஆணையம் ஏற்காது. அதற்கு நல்ல எடுத்துக்காட்டு, டி.டி.வி தினகரனின் பதில் மனுவை தேர்தல் ஆணையம் ஏற்காதது தான்.
அடுத்து சசிகலாவும் பொதுச்செயலாளர் ஆனது செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவிக்கும். இதையடுத்து ஓ.பி.எஸ்ஸே கழக பொதுச்செயலாளராக தேர்வு செய்யபடுவார்.
விரைவில் ஆட்சியையும் கட்சியும் ஓ.பி.எஸ் பக்கம் வரும்
இவ்வாறு அவர் பேசினார்.