
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா அதிமுக ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவதால், இரு அணிகளை இணைக்கும் பணியில் திவாகரன் இறங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சசிகலா மற்றும் ஓபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்தது. சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து. துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் அக்கட்சியை கவனித்து வந்தார்.
இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டார்.அவர் இனி கட்சிப் பணிகளில் ஈடுபடக் கூடாது என அமைச்சர்கள் போர்க் கொடி தூக்கியதையடுத்து தினகரன் தலைமையில் மூன்றாவது அணி உருவானது, தினகரனுக்கு 32 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் ஆட்சி எந்த நேரத்திலும் கவிழலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இப்பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில் கட்சியையும், ஆட்சியையும் உடைத்து விடக்கூடாது என்பதில் சசிகலா கவனமுடன் இருப்பதாகவும் இந்த அணிகளிடையே இணைப்பு முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என அவர் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் பணிகளை சசிகலாவின் தம்பி திவாகரன் மேற்கொள்ள வேண்டும் அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணி நிர்வாகிகளை திவாகரன் சந்தித்து பேசியயுள்ளார். இரு அணிகள் சார்பில் வைக்கப்பட்ட பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாகவும், விரைவில் சுமூகமான முடிவு ஏற்பட உள்ளதாகவும் தெரிகிறது. அதிமுகவில் அடுத்த நாட்டாமை உருவாகிறார்.