இந்துக்களின் காளி தெய்வத்தை இழிவுபடுத்தி புகைப்படம் வெளியிட்ட இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் தயாரித்துள்ள ஆவணப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவு மாநில தலைவர் நாச்சியப்பன் வலியுறுத்தியுள்ளார்.
இந்துக்களின் காளி தெய்வத்தை இழிவுபடுத்தி புகைப்படம் வெளியிட்ட இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் தயாரித்துள்ள ஆவணப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவு மாநில தலைவர் நாச்சியப்பன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகார் மனுவின் விவரம் பின்வருமாறு:- நான் பாரதிய ஜனதா கட்சியின் ஆலய மேம்பாட்டுப் பிரிவு மாநில தலைவராக உள்ளேன், சமூகவலைதளத்தில் இந்துக்கள் புனித தெய்வமாக வழிபடும் காளி தெய்வம் குறித்து இந்து மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரை பூர்வீகமாக கொண்ட லீனா மணிமேகலை என்ற ஆவணப்பட இயக்குனர் இந்துக்களால் வழிபடக்கூடிய காளி தெய்வத்தை போன்று வேடம் பூண்ட பெண்ணின் கையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் LGBTகொடியுடன் வாயில் புகை பிடித்துக் கொண்டிருக்கும் தோற்றத்துடனான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு அவரின் ஆவணப்படத்திற்கு விளம்பரம் செய்துள்ளார்.
இந்த லீனா மணிமேகலை ஒரு கடவுள் மறுப்பாளர் என்ற பெயரில் இந்து கடவுள்களை பற்றி அடிப்படை புரிதல் ஏதுமில்லாமல் இது போன்ற ஒரு புகைப்படத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளார். இவரின் இத்தகைய செயல் கோடான கோடி இந்துக்களின் நம்பிக்கைகளையும் எண்ணங்களையும் அவமதிப்பது போலவும் அவர்களின் காளி தெய்வத்தை வணங்கக் கூடிய மக்களின் நம்பிக்கையை கேலி செய்யும் வகையிலும் உள்ளது. காளி தெய்வத்தின் கையில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் LGBT கொடியையும் கொண்டுள்ள வகையில் இந்த உருவம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி கலவரத்தை உருவாக்க வேண்டும் என்று மேற்படி லீனா மணிமேகலையின் எண்ணம் உள்ளது.
நம் தமிழகத்தில் பெரும்பான்மையான அம்மன் கோயில்களில் ஆடி மாதத்தில் திருநங்கைகளாக இருப்பவர்கள் கடுமையான விரதம் இருந்து மாமிசம் கூட உண்ணாமல் இருந்து தான் காலி தெய்வத்தின் வேடம் பூண்டு ஊர்வலமாக வருவார்கள். இவ்வாறு இருக்க இவர் தன்னுடைய ஆவணப்படத்தை விளம்பரப்படுத்த இவ்வாறான புகை பிடிக்கும் வகையிலான புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதால் அமைதியாக இருக்கக் கூடிய சமூகத்தில் இதனால் பிளவு உண்டாகி கலவரம் ஏற்படும் சூழல் உண்டாகி உள்ளது. மேலும் இது தயாரித்துள்ள இந்த ஆவணப்படமானது வெளிவரும் பட்சத்தில் இது சமூகத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்குவதுடன், மக்களிடையே பிளவை ஏற்படுத்தி கலவரத்தை உருவாக்க கூடிய சூழ்நிலை கொண்டதாக அமைந்து விடும் என்று பெரும்பான்மையான இந்து மக்கள் அச்சம் அடைகிறோம்.
எனவே இந்து மதத்தை பற்றியும் இந்து கடவுள் பற்றியும் அடிப்படை புரிதல் ஏதும் இல்லாமல் தனக்கு தோன்றிய வகையில் இந்துக்களின் தெய்வமான காளி தெய்வத்தின் உருவத்தை சித்தரித்து புகைப்படத்தை உருவாக்கி அதை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு காளி தெய்வத்தை வணங்கக் கூடிய பெரும்பான்மையான இந்து மக்களின் எண்ணங்களை அவமதித்து அவர்களின் நம்பிக்கைகளை கேலி செய்யும் வகையில் செயல் பட்டதுடன் மக்களிடையே பிளவை உண்டாக்கி சமூக அமைதியை தொலைத்து கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் இது போன்ற புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்து, அவரின் ஆவண படம் வெளிவருவதை தடை செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என அதில் கூறப்பட்டுள்ளது.