அற்புதம்மாள் கோரிக்கை... பேரறிவாளனுக்கு ஒரு மாதம் சிறை விடுப்பு... மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!

By Asianet TamilFirst Published May 19, 2021, 9:28 PM IST
Highlights

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 
 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார். அவருடைய உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு பல முறை பரோல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பேரறிவாளன் தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே நாடெங்கும் கொரோனா இரண்டாவது பரவல் அலையால் தொற்றும் மரணங்களும் அதிகரித்துள்ளன.
எனவே, பெருந்தொற்றால் சிறைக்கைதிகள் பாதிக்கப்படாமல் இருக்கவும் தேவைப்பட்டால் பரோல் விடுப்பு வழங்க வேண்டும் கோரிக்கை வலுத்து வருகிறது. பேரறிவாளன் ஏற்கனவே நீரிழிவு, சிறுநீரக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர் என்பதால், அவருக்கு கொரோனா தொற்று அபாயமும் உள்ளது. கொரோனா வைரஸ் உருபெற்றுள்ளதால் மரணங்களும் அதிகமாக நிகழ்கின்றன. இந்த அபாய நிலையைக் கருத்தில்கொண்டு பேரறிவாளனுக்கு நீண்ட பரோல் விடுப்பு அளிக்க வேண்டும் என்று அவருடைய தாயார் அற்புதம்மாள் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக அரசு இன்று, உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்று, தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் இருந்துவரும் ஏ.ஜி.பேரறிவாளனுக்கு, மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டுமென அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்குக் கோரிக்கை அளித்திருந்தார். அந்தக் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏ.ஜி.பேரறிவாளனுக்கு, உரிய விதிகளைத் தளர்த்தி, 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கிட ஆணையிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!