
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகர் ரஜினிகாந்த்தை கடந்த மாதம் சந்தித்தார். நடிகர் ரஜினிகாந்த் சந்திப்புக்குப் பிறகு அர்ஜுன் சம்பத், செய்தியாளர்களிடம் பேசும்போது, நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்தார். மேலும், அதற்கான ஏற்பாடுகளை ரஜினி செய்து வருவதாகவும் அர்ஜுன் சம்பத் கூறினார்.
அரசியலுக்கு நடிகர் ரஜினி சிங்கம் போன்று தனியாக வருவார் என்றும், அவரது தலைமையில் கூட்டணி அமைத்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தூத்துக்குடியில், இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், அரசியலில் நடிகர் ரஜினிகாந்த் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று கூறினார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்தும் மீண்டும் அவரை சந்திப்பேன் என்றும் அர்ஜுன் சம்பத் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, அவ்வப்போது கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். இது குறித்து செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர், நடிகர் ரஜினிகாந்த் மீது அவதூறு பரப்பும் சுப்பிரமணியன் சுவாமி மீது வழக்கு தொடரப்படும் என்றும் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.