
மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீர் தேர்வை எழுதுவதற்காக அரியலூரைச் சேர்ந்த ஹேமா என்ற மாணவி வறுமை காரணமாக தனது தாயின் கம்மலை அடகு வைத்து எர்ணாகுளம் புறப்பட்டுச் சென்றார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து அனைத்து பிரச்சனைகளிலும் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. மருத்துவப் படிப்புக்காக நீட் தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுதியே தீர வேண்டும் என மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. திடீர் என நீட் தேர்வு அறிவிக்கப்பட்டதால் கடந்த ஆண்டு தமிழக மாணவர்கள் குறைவான மருத்துவ சீட்களை பெற்றனர்.
இந்நிலையில் பெரும்பாலான தமிழக மாணவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு தயாராக உள்ளனர். ஆனால் இந்த ஆண்டு மத்திய பாஜக அரசு தமிழக மாணவர்களை வேறு வகையில் வஞ்சித்து விட்டது. அதாவது தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுத கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
இதனால் ஏழை-எளிய மாணவர்கள் மிகுந்த செலவில் வேறு மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக பல அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும், தமிழக அரசும் உதவி செய்வதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் அரியலூரைச் சேர்ந்த ஏழை விவசாய கூலித் தொழிலாளியின் மகளான ஹேமாவுக்கு நீத் தேர்வு மையம் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. கேரளா செல்ல அவருக்கு பணம் இல்லா நிலையில் நேற்று அவர் தனது தாயின் கம்மலை அடகு வைத்துள்ளார்.
இதையடுத்து இன்று ஹேமா எர்ணாகுளம் புறப்பட்டுச் சென்றுள்ளார். நீட் தேர்வுக்கு நன்றாக படித்திருப்பதாகவும்,இந்த வறுமையிலும் படித்து டாக்டராகியே தீருவேன் என்றும் ஹேமா தெரிவித்துள்ளார்.