
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது என முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நெருக்கமான 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் இன்று காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனை கண்டித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், '’அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ரெய்டு மூலம் அச்சுறுத்தினால் அதையும் எதிர்கொள்ள அஇஅதிமுக தயாராகவே உள்ளது. இது போன்ற ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கைகளை திமுக அரசு நிறுத்த வேண்டும். எங்களை அச்சுறுத்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.
எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் வந்தாலும் எதிர்கொள்ள அதிமுக தயார். சட்டபூர்வமாக இதை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெறும் ரெய்டு கண்டனத்திற்குரியது. எந்தவித முகாந்தரமும் இல்லாமல் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெறுகிறது’’ என அவர் தெரிவித்துள்ளார்.