
2வது அலையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி 420 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக டெல்லியில் 100 பேர் பலியாகி உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் பட்டியல் வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பிற்கு ஆளான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் முன்களப் பணியாளர்களாக இருக்கும் மருத்துவர்களின் பங்கு அளப்பரியது. இவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்தே சிகிச்சை அளித்து வருகிறார்கள். கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையில் சிக்கி நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் நாடு முழுவதும் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக விரிவான அறிக்கையை இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. அதில், ’’கொரோனா முதல் அலையில் 747 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக தமிழகத்தில் 91 மருத்துவர்கள் பலியாகியிருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையில் இதுவரை 420 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக டெல்லியில் 100 மருத்துவர்கள் வைரஸ் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அதன்பிறகு படிப்படியாக நிலைமை சீராகி வருவது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பிகார் மாநிலத்தில் 96 மருத்துவர்களும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் 41 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் 31 மருத்துவர்களும், தெலங்கானாவில் 20 பேரும், மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவில் தலா 16 பேரும் கோவிட் தொற்றுக்கு பலியாகிவிட்டனர். நாட்டிலேயே அதிகபட்ச பாதிப்பை கொண்டிருக்கும் மகாராஷ்டிராவில் தற்போதைய 2வது அலையில் 15 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.