வழக்கை வாபஸ் வாங்கினால் 10 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை.!! மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Dec 22, 2020, 11:56 AM IST
Highlights

இனி எந்த காலத்திலும் மின்வாரியம் தனியார் மயமாகாது. கேங்மேன் பணிக்கு 5 ஆயிரம் பேரை எடுப்பதாக தெரிவித்தோம், காலிப்பணியிடங்கள் அதிகமாக இருந்த காரணத்தால் முதல்வர் பத்தாயிரம் பேரை எடுக்கச்  சொன்னதின் அடிப்படையில் ஆணையிட்டோம்.

தமிழக மின்வாரியம் இனி எந்த காலத்திலும் தனியார் மயம் ஆகாது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தொழிற்சங்கத்தினர் உடனே வழக்கை வாபஸ் பெற்றால் 10,000 பேருக்கு பணி ஆணை வழங்க தயார் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

சென்னையில் அமைச்சர் தங்கமணி செய்தியாளருக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:  மின்சார வாரியம் தனியார்மயமாக்க உள்ளதாக ஆணை வழங்கப்பட்டுள்ளது, அதனால் தனியார் மயமாக்க உள்ளது என்ற தகவல் வெளியானபோது அன்றைய தினமே அதை மறுத்து மின்சார வாரியம் எந்த சூழ்நிலையிலும் தனியார் மயம் ஆகாது, வேலை வாய்ப்பை உருவாக்கி தருவோமே தவிர, எந்த காலத்திலும் தனியார்மயமாகாது என்று தெரிவித்தேன். மத்திய அரசு ஒரு சட்டம் கொண்டு வந்த போது கூட முதலமைச்சர் உடனடியாக மத்திய அரசுக்கு இது கூடாது என கடிதம் எழுதினார். நாங்கள் தொடர்ந்து மின்சார வாரியம் அரசுத்துறை யாகத்தான் இருக்கும். தனியார் மயம் ஆகாது என்று உறுதியாகச் சொல்லி பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் போராட்டம் நடத்தும் ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கிறார்கள். 

அவர்களது எண்ணம் என்னவென்று எங்களுக்கு புரியவில்லை, இந்த அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த  முயற்சியா எனவும் தெரியவில்லை. தனியார் மயமாகாது என்று நாங்கள் உறுதியாக சொல்லியும் பேச்சுவார்த்தைக்கு வர மறுப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இருந்தாலும்கூட அன்றைய தினம் அனுப்பிய ஆணை திரும்பப் பெறப்படுகிறது. நான் ஏற்கனவே சொன்னபடி 50 சதவீத பணியாளர்கள் குறைவாக உள்ள பகுதிகளில் அங்கு தொய்வின்றி பணி தொடர, தடையில்லா மின்சாரம் வழங்க, அந்தப்பகுதியில் உள்ளவர்களை பயன்படுத்த வேண்டும் என்று ஆணை வழங்கப்பட்டது. அதை அவர்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டார்கள். தனியார் மயமாக்குவதாக எண்ணிக்கொண்டு போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஆணையை ரத்து என அறிவிக்க நினைத்தேன், ஆனால் வர மறுத்து விட்டார்கள். ஆனாலும் பரவாயில்லை, மக்களுக்கு உண்மை புரிவதற்காக அந்த ஆணையை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம். 

இனி எந்த காலத்திலும் மின்வாரியம் தனியார் மயமாகாது. கேங்மேன் பணிக்கு 5 ஆயிரம் பேரை எடுப்பதாக தெரிவித்தோம், காலிப்பணியிடங்கள் அதிகமாக இருந்த காரணத்தால் முதல்வர் பத்தாயிரம் பேரை எடுக்கச்  சொன்னதின் அடிப்படையில் ஆணையிட்டோம். தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் தடை வாங்குவதற்காக உயர்நீதிமன்றம் சென்றுள்ளார்கள். அவர்களிடத்தில் பணிசெய்த நபர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பதற்காக உயர் நீதிமன்றம் சென்றுள்ளார்கள். அவர்கள் வழக்கை வாபஸ் வாங்கினால் அடுத்த கணமே இந்த வாரத்திலேயே 10 ஆயிரம் பேருக்கு பணி வழங்க தயார். இவ்வாறு அவர் கூறினார்.
 

click me!