பாசறையா..? பேரவையா..? கட்சியா..? மு.க.அழகிரி முன் இருக்கு ஏகப்பட்ட ஆஃபர்கள்... அதிர்ச்சியில் திமுக!

By Thiraviaraj RMFirst Published Dec 22, 2020, 11:51 AM IST
Highlights

முழுமையாக கட்சியாக இல்லாமல் பாசறை, பேரவை என ஒரு அமைப்பை தொடங்கினால் என்ன? என்கிற ஒரு சிந்தனையும் அவரிடம் இருக்கிறது. 

கருணாநிதியின் மறைவுக்கு முன்பே கட்சியிலிருந்து முழுமையாக ஓரம்கட்டப்பட்டார் மு.க.அழகிரி. அதன் பிறகு கட்சியில் இணைய பல்வேறு வகைகளில் முயற்சி செய்து பார்த்தார். இயலவில்லை. இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக அமைதியாக இருந்த அவர், சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் மீண்டும் கம்பு சுழற்ற ஆரம்பித்திருக்கிறார். தனது நடவடிக்கைகளை வேகப்படுத்தும் நோக்கில் தற்போது சென்னையில் முகாமிட்டுள்ள அழகிரி, பல்வேறு தரப்பினருடனும் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

 

இதுகுறித்து அழகிரிக்கு நெருக்கமானவர்கள் சிலர், ’’அண்ணன் அரசியல் ரீதியான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு வாய்ப்புகளையும் அவர் பரிசீலித்து வருகிறார். தந்தை பெயரில் ’த.க.தி.மு.க’என்கிற புதுக் கட்சி தொடங்கும் ஐடியாவும் அதில் ஒன்று. ஆனால், தனிக்கட்சி தொடங்குவதால் ஏற்படும் பொருட்செலவும், மாநிலம் முழுவதும் அலைய வேண்டியிருப்பதால் ஏற்படும் உடல்நலக்குறைவும் அழகிரியை யோசிக்க வைத்திருக்கின்றன. எனவே முழுமையாக கட்சியாக இல்லாமல் பாசறை, பேரவை என ஒரு அமைப்பை தொடங்கினால் என்ன? என்கிற ஒரு சிந்தனையும் அவரிடம் இருக்கிறது. 

ரஜினி கட்சி ஆரம்பிக்கும் பட்சத்தில் தனது அமைப்பை அவருக்கு ஆதரவாக செயல்பட வைப்பது, ரஜினி அணியில் ஆதரவாளர்களை நிறுத்துவது என பல்வேறு ஆலோசனைகள் மு.க.அழகிரி வட்டாரத்தில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.  ஒருவேளை இது சரியாக வராத பட்சத்தில் திமுகவிற்கு எதிரான வலுவான அணிக்கு ஆதரவு தருவது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்’’ என்கிறார்கள்.

 

 இது தொடர்பாக அழகிரிக்கு நெருக்கமான மதுரை பிரமுகர் ஒருவர், ‘’அண்ணன் முன்னால் பல வாய்ப்புகள் இருக்கின்றன. எந்த வாய்ப்பை  பயன்படுத்தினாலும் ஸ்டாலின் தரப்பை சாய்க்க  வேண்டும் என்பதே அவரது பிரதான இலக்காக இருக்கிறது. திமுகவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் பெரிய பூகம்பமே வெடிக்கும். சீட் கிடைக்காத கோபத்தில் பலரும் அந்த கட்சியிலிருந்து விலகுவார்கள். இவர்களைப் போன்றவர்கள் எங்கள் பக்கம்தான் வருவார்கள். இது தவிர தேர்தல் வேலைகளில் அழகிரியின் நிபுணத்துவம் ஊருக்கே தெரியும். இவையெல்லாம் ஒன்று சேரும்போது  திமுகவின் ஆட்சி கனவு தூள் தூளாகும்’’ என்கிறார்கள். 

click me!