லஞ்ச ஒழிப்பு போலீசை வெற்றிலை பாக்கு வைத்து வீட்டிற்கு அழைக்கும் ஜெயக்குமார்.. திமுகவை கலாய்த்து செம்ம நக்கல்.

By Ezhilarasan BabuFirst Published Jan 20, 2022, 2:00 PM IST
Highlights

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு திராணி இருந்தால் சட்டமன்றத்தை கலைத்து விட்டு மீண்டும் தேர்தலை நடத்தட்டும், அப்போது ஓரிடத்தில் கூட திமுக வெற்றி பெற முடியாது என்றார். திமுக அரசை பற்றி யாரிடம் கேட்டாலும் காவல்துறையை ஏவி சோதனை நடத்துகிறது, மிரட்டுகிறது, கருத்துச் சுதந்திரத்தை பறிக்கிறது என்கின்றனர் என்றார்.

எப்போது வேண்டுமானாலும் எனது வீட்டுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்கு வரலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள்  உயர்கல்வித்துறை அமைச்சர் கே. பி அவர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் அரசுக்கு எதிராக பாஜக அதிமுக ஆகிய கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. தேர்தல் நேரத்தின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது என்றும் பாஜக தொடர்ந்து ஸ்டாலின் தலைமையிலான அரசை விமர்சித்து வருகின்றது. அதே நேரத்தில் எதிர்க் கட்சியான அதிமுகவும் திமுக அரசு மீது பல்வேறு குற்றஞ்சாட்டுகளை முன் வைத்து வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழலில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர்  எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ். பி வேலுமணி, கே.சி வீரமணி ஆகியோரது இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

அவர்கள் மீது இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அலுவலகங்களிலும், அவருக்கு சொந்தமான 62 இடங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இது தொடரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது, திமுக அரசின் இந்த தொடர் நடவடிக்கையால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கலக்கத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில்தான் அதிமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பழகன் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்சி ஒழிஇப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் 57 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. தமிழகத்தில் சென்னை, சேலம், தர்மபுரி ஆகிய இடங்களிலும் தெலுங்கானா மாநிலத்தில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. தர்மபுரியில் மட்டும் 41 இடங்களில் சோதனை நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவர்மீது மட்டுமல்லாது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன் சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்க்கப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை காட்டிய சொத்துக்களின் மதிப்பையும், சேமிப்பு களையும் செலவினங்களையும் ஒப்பிட்டு பார்க்கும்போது 11 கோடியே 32 லட்சத்து 95 ஆயிரத்து 755 ரூபாய் கணக்கில் வராமல் சொத்துக்களாக குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி சொத்துக்களை தன் பெயரிலும் தனது உறவினர்கள் பெயரிலும் குவித்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் கிரீன் மெடோஸ் சாலையில் அமைந்துள்ள அன்பழகனின் உறவினரான சிவகுமார் என்பவரது வீட்டில் நடந்துவரும் ரெய்டை பார்வையிட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்கள் சந்தித்த அவர், திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் அதிமுகவை அழித்துவிட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து அதிமுக மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் விடியா திமுக அரசு இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்றார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், அதிமுக அமைச்சர்கள் ஊழல் வாதிகள் என்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் காவல்துறையை ஏவிவிட்டு இது போன்ற சோதனைகளை திமுக அரசு நடத்துகிறது என்றார். பொங்கல் பண்டிகையை ஒட்டி திமுக அரசு வழங்கிய பரிசு பொருள்கள் தரமற்ற நிலையில் உள்ளன, பொதுமக்கள் அதை குப்பைத் தொட்டிகளில் கொட்டும் அளவிற்கு உள்ளதால் அதை மறைப்பதற்காக இந்த சோதனை நடத்தப்படுகிறது என்றார்.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு திராணி இருந்தால் சட்டமன்றத்தை கலைத்து விட்டு மீண்டும் தேர்தலை நடத்தட்டும், அப்போது ஓரிடத்தில் கூட திமுக வெற்றி பெற முடியாது என்றார். திமுக அரசை பற்றி யாரிடம் கேட்டாலும் காவல்துறையை ஏவி சோதனை நடத்துகிறது, மிரட்டுகிறது, கருத்துச் சுதந்திரத்தை பறிக்கிறது என்கின்றனர் என்றார். இதுபோன்ற சோதனைகளுக்கெல்லாம் அஞ்சப்போவதில்லை என்ற அவர் எப்போது வேண்டுமானாலும் எங்கள் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனைக்கு வரலாம் என்றார். 
 

click me!