தலைவாழை இலைபோட்டு அண்ணாமலைக்கு உணவு பரிமாறிய ஆளுநர்.. பாஜக நிர்வாகிகளை உருக வைத்த ஒற்றை வார்த்தை.

Published : Jan 20, 2022, 12:48 PM IST
தலைவாழை இலைபோட்டு அண்ணாமலைக்கு உணவு பரிமாறிய ஆளுநர்.. பாஜக நிர்வாகிகளை உருக வைத்த ஒற்றை வார்த்தை.

சுருக்கம்

திருமண நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் காந்தி, நான் உட்பட மூவரும்  பந்தியில் அமர்ந்தோம், அப்போது ஆளுநர் அவர்களை சாப்பிடுமாறு அழைத்தோம், உடனே ஆளுநர் நீங்கள் சாப்பிடுங்கள் என கூறியதுடன், அவராகவே எங்கள் மூவருக்கும் தலைவாழை இலை போட்டு, அன்போடு எங்கள் மூவருக்கும் உணவு பரிமாறினார். 

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் உணவு பரிமாறியுள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கட்சியில் உண்மையாக உழைக்கும் உழைப்பாளி உங்களுக்கு உணவு பரிமாறுவதில் பெருமை கொள்கிறேன் என்று அப்போது அவர் கூறியுள்ள வார்த்தை அங்கிருந்த நிர்வாகிகளை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

தமிழகத்தில் எப்படியும் காலூன்ற வேண்டும் என்ற முயற்சியில் பல ஆண்டுகளாக பாஜக முனைப்பு காட்டி வருகிறது. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும், கழகங்கள் இல்லாத  தமிழகத்தை உருவாக்குவோம் என்ற முழக்கத்துடன் பாஜக களமாடி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த முழக்கம் முன்வைக்கப்பட்டு வருகிறது, ஆனாலும் எதிர்பார்த்த அளவிற்கு பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. அப்போதைய மாநில தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் அதற்கான பகிரத முயற்சிகளை முன்னெடுத்தார், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாஜகவை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார், ஆனால் அது பெரிய அளவில் பலன் இல்லை. பின்னர் அவருக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டது, தமிழிசை சவுந்தரராஜனுக்கு முன்புவரை பாஜக என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான கட்சி என்ற பிம்பம் இருந்து வந்த நிலையில் ,அந்த பிம்பம் தமிழிசை சௌந்தரராஜனால் உடைக்கப்பட்டது. 

அவரைத் தொடர்ந்து எல். முருகன் மாநில தலைவராக பொறுப்பேற்றார் அவர் நடத்திய வேல் யாத்திரை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பாஜகவை கொண்டு சேர்த்தது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பாஜகவின் தேடி வந்து இணையும் அளவிற்கு பாஜகவின் செல்வாக்கு உயர்ந்தது. அதைத்தொடர்ந்து பாஜகவுக்காக, பிரதமர் மோடிக்காக தனது அரசு பதவியை தூக்கி எறிந்து விட்டு வந்த அண்ணாமலைக்கு பாஜகவின் மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தற்போது பாஜக தமிழக இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுவருகிறது. அண்ணாமலைக்கு  ஆர்மி வைக்கும் அளவிற்கு சமூக வலைதளத்தில் பாஜகவுக்கு ஆதரவு பெருகிவருகிறது.  அத்தனை ஆண்டுகள் பாஜக தலைவர்கள் போட்ட விதை மெல்ல மெல்ல வளர்ந்து கடந்த சட்டமன்ற தேர்தலில் 4 சட்டமன்ற உறுப்பினர்களை அக்காட்சி அறுவடை செய்துள்ளது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அசைக்கமுடியாத வாக்கு வங்கி கொண்ட கட்சியாக பாஜக உருவாக்கியுள்ளது.

அச்செல்வாக்கை தமிழகம் முழுவதும் பரப்பும் முயற்சியில் தொடர்ந்த கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் தமிழகத்தில் தங்கள் கட்சிக்கென தனித்துவத்தை உருவாக்கும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன் விளைவாக எதிர்க்கட்சியாக திமுக இருந்தாலும் உண்மையான எதிர்க்கட்சி தாங்கள்தான் என்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவை காட்டிலும் ஒரு படி மேலே சென்று திமுகவை விமர்சிப்பதில் பாஜக முனைப்பு காட்டி வருகிறது. ஒரு காலத்தில் தமிழக மக்கள் மத்தியில் அன்னியப்பட்டு நின்ற பாஜகவை தமிழக மக்கள் மெல்ல அரவணைக்க தொடங்கியுள்ளனர். தற்போதுள்ள கிடைத்துள்ள  4 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி என்பது சாதாரணமாக, எளிதாக கிடைத்த வெற்றி அல்ல. பல ஆண்டுகளாக கட்சித் தலைவர்கள் செய்த உழைப்பின் பலனாகவே அது கிடைத்துள்ளது.

தற்போது பாஜக மீது நம்பிக்கை ஏற்பட்டு பெண்கள் முதல் இளைஞர்கள் வரை முன்வந்து இணைய தொடங்கியுள்ளனர். இந்நிலையில்தான் ஒரு மாநிலத்தின் ஆளுநராக ஆனபிறகும்  தமிழக பாஜக தலைவர்களை கௌரவிக்கும் வகையில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பாஜக நிர்வாகிகளுக்கு உணவு பரிமாறி உள்ளார். பாஜகவின் மாநில பொருளாளர் எஸ். ஆர் சேகர் மகன் திருமண நிகழ்ச்சி கோவையில் அவினாசி சாலையில் உள்ள தனியார் திருமன மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். குஷ்பு பாஜக விவசாய அணி தலைவர் மற்றும் மாநில துணைத் தலைவர் ஜி.கே நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் காந்தி ஆகியோர் பங்கேற்றனர். அப்போதுதான் அங்கிருந்த ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பாஜக நிர்வாகிகளுக்கு உணவு பரிமாறி அவர்களை ஆச்சரியத்தில் அழுத்தினார். இது குறித்து தெரிவித்துள்ளார் ஜி.கே நாகராஜன்,

திருமண நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் காந்தி, நான் உட்பட மூவரும்  பந்தியில் அமர்ந்தோம், அப்போது ஆளுநர் அவர்களை சாப்பிடுமாறு அழைத்தோம், உடனே ஆளுநர் நீங்கள் சாப்பிடுங்கள் என கூறியதுடன், அவராகவே எங்கள் மூவருக்கும் தலைவாழை இலை போட்டு, அன்போடு எங்கள் மூவருக்கும் உணவு பரிமாறினார். கட்சியின் உண்மையான உழைப்பாளிகளான உங்களுக்கு உணவு பரிமாறுவதில் பெருமை கொள்கிறேன் என்று அப்போது அவர் கூறினா.ர் அவரின் அந்த வார்த்தை எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. புதுச்சேரி, தெலுங்கானா என இரண்டு மாநிலங்களுக்கும் ஆளுநராக இருப்பவர், கட்சி தொண்டர்களுக்கு உணவு பரிமாறுவது சாதாரணமான விஷயம் அல்ல. வேறு யாரும் இதை செய்ய மாட்டார்கள். ஆளுநரின் அருகில் கூட போக முடியாது, தற்போது தமிழகத்தில் பாஜகவுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் தமிழிசை அவர்கள். அவர் ஒரு கடுமையான உழைப்பாளி, அவரின் உழைப்பும், இந்த கனிவும் தான் அவரை ஆளுநர் என்ற இந்த உயர்ந்த இடத்திற்கு கொண்டுவந்து இருக்கிறது என அவர் கூறினார்.
 

PREV
click me!

Recommended Stories

செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!
வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!