உயிரை பொருட்படுத்தாது பணியாற்றிவரும் மின்வாரியத் தொழிலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவியுங்கள்- சீமான்.

By Ezhilarasan BabuFirst Published May 12, 2021, 12:33 PM IST
Highlights

இப்பெருந்தொற்றுக் காலத்தில், இதுவரை ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட மின்வாரியத் தொழிலாளர்கள் உயிரிழந்தபோதும், அரசு அறிவித்துள்ள கொரொனா முன்களப்பணியாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய இழப்பீடு உள்ளிட்ட எவ்வித உதவிகளும் மின்வாரியத் தொழிலாளர்களுக்குக் கிடைப்பதில்லை.

கொரோனா ஊரடங்கு காலத்திலும் தன்னுயிரைப் பொருட்படுத்தாது மக்கள் நலப்பணிக்காக இரவு பகல் பாராது பாடுபடும் மின்வாரியத் தொழிலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப்பணியாளர்களாகப் பணியாற்றும் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என எழுந்திருக்கும் கோரிக்கை மிக நியாயமானது. அதிலிலுள்ள தார்மீகத்தை உணர்ந்து நாம் தமிழர் கட்சி அதனை முழுமையாக ஆதரிக்கிறது. 

புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப்பேரிடர் காலங்களிலும், தற்போதைய கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது, களத்திலிறங்கி இரவு பகல் பாராது பணிபுரியும் மின்வாரிய ஊழியர்களின் பொறுப்புணர்வுமிக்கப் பெரும்பணியானது போற்றுதற்குரியதாகும். கொரோனா எனும் கொடுந்தொற்றால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இப்பேரிடர் காலத்தில் மக்கள் உயிர்காக்கப் போராடும் மருத்துவமனைகளுக்கும், ஆக்சிஜன் உற்பத்தி உள்ளிட்ட மருத்துவப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும், ஆரம்பச் சுகாதாரநிலையங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், உணவகங்கள் போன்றவை தொய்வின்றி இயங்கவும், ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ள மக்கள் பாதிக்கப்படாமலிருக்கவும் உடனுக்குடன் மின் வழங்கலில் ஏற்படும் தடைகளைச் சரிசெய்து, மக்கள் நலப்பணியாற்றும் மின்வாரியத் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது அரசின் பெருங்கடமையாகும். 

இப்பெருந்தொற்றுக் காலத்தில், இதுவரை ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட மின்வாரியத் தொழிலாளர்கள் உயிரிழந்தபோதும், அரசு அறிவித்துள்ள கொரொனா முன்களப்பணியாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய இழப்பீடு உள்ளிட்ட எவ்வித உதவிகளும் மின்வாரியத் தொழிலாளர்களுக்குக் கிடைப்பதில்லை. எனவே, தங்களது உயிரையும் பொருட்படுத்தாது மக்கள் நலப்பணியாற்றி வருகின்ற மின்வாரியத் தொழிலாளர்களின் அரும்பணியை அங்கீகரிக்கும் வகையில் மின்வாரியத்தில் பணிபுரியும் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவித்து உடனடியாக அரசாணை வெளியிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன். 
 

click me!