அண்ணாவின் பிறந்த நாளை மாநில உரிமைகள் தினமாக கொண்டாட வேண்டும்... ஸ்டாலினுக்கு திருமாவளவன் ஐடியா..!

By Asianet TamilFirst Published Sep 10, 2021, 9:38 PM IST
Highlights

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை மாநில சுயாட்சி தினம் அல்லது மாநில உரிமைகள் தினமாக கொண்டாட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
 

பெரம்பலூரில் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பெரியாரின் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். செப்டம்பர் 17-ஆம் தேதி தமிழகமெங்கும் பெரியார் சிலைகள் அருகே விசிக சார்பில் சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பு நிகழ்வு நடைபெறும். இதேபோல மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து உரிமைக் குரல் எழுப்பி, மாநிலங்களுக்கான உரிமைகளைப் பாதுகாக்கவும் கூட்டாட்சி தத்துவத்தை வலியுறுத்தி பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை மாநில சுயாட்சி தினம் அல்லது மாநில உரிமைகள் தினமாக கொண்டாட வேண்டும். இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட வேண்டும்.
சாதிவாரி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பலதரப்பினர் கேட்கிறார்கள். இந்தக் கோரிக்கையை விசிக ஆதரிக்கிறது. அப்படி கணக்கெடுப்பு நடத்துவது அவசியமும்கூட. இது பல்வேறு பிரச்னைகளுக்கு விடை அளிக்கும். தமிழக முதல்வர் இக்கோரிக்கை குறித்து பரிசீலிக்க வேண்டும். தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தை அமைக்க வேண்டும் என்ற விசிகவின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியிருக்கிறது. இதற்காக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று திருமாவளவன் தெரிவித்தார்.
 

click me!