கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் தத்தளித்த பகுதிகளில் டிராக்டர் ஓட்டி சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார்.
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் தத்தளித்த பகுதிகளில் டிராக்டர் ஓட்டி சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார்.
மழை, வெள்ளத்துக்கு எப்படி சென்னை ஒவ்வொரு முறையும் பாதிக்கப்படுமோ அப்படி பாதிக்கப்படும் மாவட்டங்களில் கடலூரும் உண்டு. புயல் அறிவிப்பு, கட்டாயம் கடலூருக்கு பாதிப்பு என்பது களத்தில் பலரும் கூறும் விஷயம்.
சென்னையை வெள்ளக்காடான பகுதிகள் ஊர் முழுக்க பேசப்பட… கடலூரிலும் நிலைமை மோசம் என்பது பலருக்கும் தெரியவில்லை. ஆனால் பாதிப்புகள் கடுமையாக இருப்பதாக செய்திகள் வெளியாக அனைத்து அரசியல் கட்சிகளும் சென்னையை விட்டு கடலூருக்கு தங்களது பார்வைகளை திருப்பி இருக்கின்றன.
அப்படித்தான்… வெள்ள காலத்தில் சூறாவளியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அதிமுகவுக்கு கடும் போட்டி கொடுக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு உள்ளார்.
புவனகிரியை அடுத்துள்ள சாத்தப்பாடி, பூவாலை, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் மழையால் நிலைமை தலைகீழ். ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி… நிலங்கள் அனைத்தும் குளங்களாக காட்சி அளிக்கின்றன.
அங்கு பாதிக்கப்பட்ட பயிர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார். காரில் வந்து இறங்கிய அண்ணாமலை.. பின்னர் டிராக்டரில் ஏறினார். கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரம் டிராக்டரில் பயணம் செய்து வெள்ள நிலைமைகளை நேரில் கேட்டறிந்தார்.
தண்ணீர் தேங்கிய விளைநிலங்களில் கால் வைத்த அண்ணாமல, பாதிப்பு விவரங்கள் பற்றி விவசாயிகளிடம் விவரங்களை கேட்டுக் கொண்டார். ஏன் இங்கு இவ்வளவு வெள்ளம்? எத்தனை ஆண்டுகளாக இத்தகைய பாதிப்புகளை சந்தித்து வருகிறீர்கள் உள்ளிட்ட விவரங்களை அவர் கேட்டார்.
பின்னர் வெள்ளத்தை தடுக்க என்ன செய்தால் சிறப்பாக இருக்கும் என்று அப்பகுதி விவசாயிகளின் கருத்துகளை கேட்டுக் கொண்டார். அங்கிருந்து கிளம்பும் போது சிறிது தூரம் வரை அண்ணாமலையே டிராக்டரை ஓட்டிச் சென்றார்.
கள நிலவரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின் காரில் பயணித்து வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார், அப்படி பார்த்தால் உண்மை நிலவரம் தெரியாது, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரிடையாக சென்று விவசாயிகளை சந்தித்து பார்வையிட வேண்டும் என்று கூறினார்.
இதுதொடர்பாக டுவிட்டரில் போட்டோக்களையும் பதிவிட்டு அண்ணாமலை கூறியிருப்பதாவது: கடலூர், பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் இருக்கக்கூடிய பூவாலை கிராமத்திற்கு சென்றிருந்தோம்.
கீழ் பரவனாறு வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 3000 ஏக்கர் விளைநிலம் தண்ணீரில் மூழ்கியதை கண்டு வேதனைக்கு உள்ளானேன். NLC நிறுவனத்திடம் பேசி குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்து இருக்கின்றோம் என்று கூறி உள்ளார்.
சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை படகில் சென்று பார்வையிட்டு அண்ணாமலை அசத்தினார். இது செட் செய்யப்பட்ட ஷூட்டிங்… முழங்கால் அளவு தண்ணீரில் படகா? என்று நெட்டிசன்கள் வச்சு செய்தனர். அதற்கு அண்ணாமலை ஆதரவாளர்கள் பதிலடி வேறு விதமாக இருந்தது.
சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ளே செல்ல, செல்ல இடுப்பளவு தண்ணீர் இருப்பதால் தான் படகில் அண்ணாமலை பயணித்தார் என்று அவரது ஆதரவாளர்கள் பதில் அளித்துள்ளனர். ஆனாலும் எதையும் ஏற்காக டுவிட்டராட்டிகள், சென்னையில் படகு, கடலூரில் டிராக்டர் என்று கண்டெண்ட் கிடைத்துவிட்டதாக இப்போதும் அண்ணாமலையின் நடவடிக்கைகளை விமர்சித்து வருகின்றனர்.
மற்றொரு புறம், வெள்ள பாதிப்பு பகுதிகளில் நேரில் பார்வையிட்டு நிலைமைகளை கண்டறிவதில் அதிமுகவை பாஜக பின்னுக்கு தள்ளிவிட்டது என்று கருத்துகளும் முன் வைக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் களத்தில் அண்ணாமலை வேகமாக செயல்படுவதை இது காட்டுவதாகவும் சிலர் கூறுகின்றனர்.
தமிழகத்தில் சென்னை மட்டுமே கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதாக ஒரு தோற்றம் இருந்து வருகிறது. ஆனால் கடலூர், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்கள் மழை, வெள்ளத்தால் தத்தளிக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்….!!
கடலூர், பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் இருக்கக்கூடிய பூவாலை கிராமத்திற்கு சென்றிருந்தோம்.
கீழ் பரவனாறு வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 3000 ஏக்கர் விளைநிலம் தண்ணீரில் மூழ்கியதை கண்டு வேதனைக்கு உள்ளானேன்.
NLC நிறுவனத்திடம் பேசி குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்து இருக்கின்றோம்! pic.twitter.com/FpimNpw3Qu