ஒருத்தரையும் விடக் கூடாது... எல்லோரையும் அடிச்சு தூக்குங்க.. மாணவி தற்கொலை விவகாரத்தில் கண் சிவந்த கேப்டன்!

By Asianet TamilFirst Published Nov 13, 2021, 9:37 PM IST
Highlights

தோழியின் தாத்தா, தோழியின் அப்பா மற்றும் ஆசிரியர் ஆகியோரை சும்மா விடக் கூடாது என்று மாணவி கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.  எனவே அப்பாவி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

வேலியே பயிரை மேய்ந்தது போல பாதுகாப்பு அளிக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரே,  மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கோவையில் பள்ளி மாணவி ஆசிரியர் ஒருவரால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி, தற்கொலை செய்துகொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது, இந்த விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “கோவையில் 12-ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லை காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.  தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர், மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  சம்பந்தபட்ட ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகத்திடம் ஏற்கனவே மாணவியின் பெற்றோர் புகார் அளித்திருந்ததாகவும், ஆனால் அந்த புகார் மீது பள்ளி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. 

ஒருவேளை பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தால், மாணவியின் மரணத்தை தடுத்திருக்கலாம். மேலும் தற்கொலைக்கு முன்பு மாணவி எழுதிய கடிதத்தில் யாரையும் சும்மா விடக்கூடாது என குறிப்பிட்டுள்ளார். தோழியின் தாத்தா, தோழியின் அப்பா மற்றும் ஆசிரியர் ஆகியோரை சும்மா விடக் கூடாது என்று மாணவி கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.  எனவே அப்பாவி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

சம்பந்தப்பட்ட ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்தால் மட்டும் போதாது, அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். சட்டங்களும், தண்டனைகளும் கடுமையாக்கினால் மட்டுமே பெண்களுக்கு எதிரான  பாலியல் துன்புறுத்தல்கள் தடுக்கப்படும். பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பது சமுதாயத்திற்கு கேடானது. எனவே,  மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்க மாணவி மரணத்துக்கு காரணமான அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளிகளில் மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் நடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க சிறப்பு குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்.

வேலியே பயிரை மேய்ந்தது போல பாதுகாப்பு அளிக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரே,  மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.” என்று அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 

click me!