10 ஆண்டுகளாக அதிமுக அரசு செயல்படவில்லை.. வெள்ளப் பாதிப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பரபரப்பு விளக்கம்!

By Asianet TamilFirst Published Nov 13, 2021, 9:09 PM IST
Highlights

வெள்ளப் பிரச்னையில் தமிழக அரசு நிரந்தர தீர்வை எடுத்து வருகிறது. சென்னை பெருநகரில் வெள்ள மேலாண்மை குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

பத்து ஆண்டு கால அதிமுக ஆட்சியில் செயல்படாத தன்மையால்தான் இவ்வளவு பாதிப்பு என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னையில் கடந்த 6-ஆம் தேதியும் 11-ஆம் தேதியும் ஏற்பட்ட வெள்ளத்தையடுத்து 5 நாட்களுக்கும் மேலாக சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதனையடுத்து இன்று டெல்டா மாவட்டங்களில் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். வெள்ளத்தால் பயிர்கள் மூழ்கிய பகுதிகளையும் நேரடியாகப் பார்வையிட்டார். இதனையடுத்து ஸ்டாலின், திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் கன மழையைத் தொடர்ந்து அரசின் நடவடிக்கைகளை எல்லாம் நீங்கள் அறிந்து இருப்பீர்கள். முதல்வராகிய நான், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் நடவடிக்கை காரணமாக பெரும் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் நீர்வளத்துறை, ஊரக உள்ளாட்சி துறை சார்பில் நீரை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்த உடனே டெல்டா மாவட்டங்களில் 4 ஆயிரம் கி.மீ. தூர் வாரப்பட்டது. இதனால் டெல்டா மாவட்டங்களில் மழைநீர் பெருமளவில் தேங்காமல் தடுக்கப்பட்டிருக்கிறது. திமுக அரசு, உழவர்களை கண் போல் பாதுகாக்கும் அரசாக இருக்கும். தற்போது 68 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு விவசாய நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. அதன்படி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அரசின் சார்பில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த நான்கு மாதங்களில் ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 2015-ஆம் ஆண்டில் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் அதுபோல வெள்ளப் பெருக்கு மீண்டும் நடக்கக் கூடாது என்று உறுதியாக இருந்தோம். அதற்கு தகுந்தாற்போல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பேரிடர் காலத்தில் அரசியல் செய்வோருக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் செயல்படாத தன்மையால்தான் இவ்வளவு பாதிப்பு. சென்னையில் இதுவரை 400 இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. திமுக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாகத்தான் பெருமளவு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டது. அதிமுக அரசு செயல்பட்ட விதத்தை மக்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். வெள்ளப் பிரச்னையில் தமிழக அரசு நிரந்தர தீர்வை எடுத்து வருகிறது.

சென்னை பெருநகரில் வெள்ள மேலாண்மை குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழு புவியியல் அமைப்பு தொடர்பான ஆய்வு செய்து அறிக்கையை அரசுக்கு தரும். இக்குழுவில் அண்ணா பல்கலைக்கழக, ஐஐடி பேராசிரியர்கள் இடம் பெற்றுள்ளார்கள். சென்னை மட்டும் அல்லாமல் டெல்டா மாவட்டங்களில் வெள்ளத் தடுப்பை தடுக்க நிரந்தர தீர்வு மேற்கொள்ளப்படும். டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரை தூர் வாரும் பணிகள் நடைபெற்றதால்தான் பெருமளவு சேதம் தடுக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு நீட்டிப்பு தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து எந்தவிதப் பதிலும் இதுவரை வரவில்லை.” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 
 

click me!