மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை..! இழப்பீடும் கொடுக்க முடியாது- திமுகவினருக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை

By Ajmal KhanFirst Published Apr 21, 2023, 3:03 PM IST
Highlights

திமுகவினர் சொத்து தொடர்பாக அண்ணாமலை வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் மன்னிப்பு கேட்க கோரி உதயநிதி, ஆர்எஸ் பாரதி நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லையென தெரிவித்துள்ளார்.

திமுக சொத்து பட்டியல்

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தது முதல் பாஜகவினர் பல்வேறு புகார்களை கூறி வருகின்றனர். தமிழக ஆளுநர் ஆர்என் ரவியிடமும் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை அண்ணாமலை கொடுத்திருந்தார். இதன் அடுத்த கட்டமாக  திமுக நிர்வாகிகளான ஜெகத்ரட்சகனுக்கு ரூ.50,219.37 கோடி, எ.வ.வேலுவுக்கு ரூ.5,552.39 கோடி, கே.என்.நேருவுக்கு ரூ.2,495.14 கோடி, கனிமொழிக்கு ரூ.830.33 கோடி, கலாநிதி மாறனுக்கு ரூ.12,450 கோடி,

மேலும் டிஆர்,பாலு, பொன்முடி  என திமுக நிர்வாகிகளின் 17 பேரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1.34 லட்சம் கோடி என கடந்த 14 ஆம்  தேதி திமுக பைல்ஸ் என்ற வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த புகார் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திமுக நிர்வாகிகளாக ஆர்எஸ் பாரதி, அமைச்சர் உதயநிதி, டிஆர் பாலு ஆகியோர் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

மன்னிப்பு கேட் முடியாது

அதில்  தன் மீது அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்டதற்காக அண்ணாமலை 500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்டதற்காக, அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  48 மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த நோட்டீஸ்க்கு பதில் அளிக்கும் வகையில் அண்ணாமலை ஆர்எஸ் பாரதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில் திமுகவினர் மீதான புகார் பொது தளத்தில்  இருந்தது எடுத்தது என்றும் இதற்காக ஆதாரம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார். எனவே இந்த பிரச்சனையில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும். இழப்பீடு வழக்கப்போவது இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.  மேலும் இந்த வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க இருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

click me!