ஓபிஎஸ் இபிஎஸ்சை அண்ணாமலை தலைவர்களாகவே மதிக்கல.. மகா மட்டமா பேசிய கே.சி. பழனிச்சாமி..

By Ezhilarasan BabuFirst Published Nov 26, 2021, 1:28 PM IST
Highlights

அதிமுக என்பது சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சியாக துவங்கப்பட்டு,  வழிநடத்தப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம், கே.பி முனுசாமி, எஸ்.பி வேலுமணி, சி.வி சண்முகம் போன்றவர்கள் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக சாதிய சாயத்தை அதிமுகவுக்கு பூசபார்க்கின்றனர். 

ஓபிஎஸ் இபிஎஸ்சை அண்ணாமலை தலைவர்களாகவே மதிக்கவில்லை என்றும், இன்னும் தங்களின் அடிமைகளாகவே பாஜக இவர்களை பாவிக்கிறது என்றும் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். நேற்று முன்தினம் அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார். 

அதிமுக பாஜக கூட்டணி அமைத்து கடந்த சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டன. அதில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும், உண்மையான எதிர்க்கட்சி தாங்கள் தான் என பாஜக கூறிவருகிறது. அதிமுகவின் கூட்டணியில் இருந்தாலும் தமிழகத்தில் பாஜகவுக்கென தனித்துவத்தை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து பாஜக தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு கட்சிகளும் கூட்டணியில் இருந்தாலும் அதிமுகவில் இருப்பவர்களுக்கும் வழக்கம்போல பாஜக வலைவிரித்து வருகிறது. பாஜகவின் இந்த செயல் கூட்டணி தர்மத்திற்கு விரோதமானது என்றும், இது நகைமுரண் கூட்டணி என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக அதிமுக தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் இல்லை.

ஆனால் அதிமுக வழிகாட்டுதல் குழுவில் இடம் பிடித்திருந்த சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் பாஜகவில்  இணைந்துள்ள விவகாரம்  அதிமுக தொண்டர்களை மிகுந்த அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழகத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவரது முன்னிலையில் மாணிக்கம் இணைந்துள்ளார்.

இந்நிலையில்  அதிமுக அபிமானிகள், அக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிமுகவின் வலுவற்ற தலைமையே இதற்கு காரணம் என்றும் அதிமுகவையும் தாக்கி பேசி வருகின்றனர்.  இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவருமான கே. சி பழனிச்சாமி அதிமுக தலைமை கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,  அதிமுக என்பது சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சியாக துவங்கப்பட்டு,  வழிநடத்தப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம், கே.பி முனுசாமி, எஸ்.பி வேலுமணி, சி.வி சண்முகம் போன்றவர்கள் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக சாதிய சாயத்தை அதிமுகவுக்கு பூசபார்க்கின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும். 

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கொடுத்ததை யாரும் தவறு என்று கூறவில்லை, ஆனால் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாகவே அதை கொடுத்திருக்க வேண்டும், ஆனால் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாக ஒரு அரை மணி நேரத்திற்கு முன்பாக அது கொடுக்கப்பட்டுள்ளது தான் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதையும் அவர்கள் முறையாக செய்யவில்லை. இது கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இப்போது அதிமுக வழிகாட்டு குழுவில் இருந்தவர் பாஜகவில் இணைந்துள்ளார். இதை ஏன் அதிமுக இதுவரை கண்டிக்கவில்லை, பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று ஏன் கூறவில்லை, இதுதொடர்பாக இபிஎஸ், ஓபிஎஸ் ஏன் கூட்டாக அறிக்கை வெளியிடவில்லை. இதுவரை ஏன் ஜெயக்குமார் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை. பாஜகவில் சேரந்தவர் சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்ஏல்ஏ, அவர் இளம் வயதுடையவர். அவருக்கு அரசியல் அனுபவமும் குறைவு. அப்படிப்பட்டவரை  வழிகாட்டு குழுவில் ஏன் சேர்த்தீர்கள்.

ஓபிஎஸ் தனக்கு சாதகமானவர்களுக்கு இதுபோல பதவிகளில் அமர்த்தி தனது ஆதரவை தக்க வைத்து கொள்கிறவர், இந்த விஷயத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் சளைத்தவர்கள் அல்ல. இவர்கள் இரண்டு பேரும் இன்னும் பாரதிய ஜனதா கட்சியின் பினாமிகளாக, பாஜகவினுடைய அடிவருடிகளாக, பாஜகவின் அடிமைகளாக உள்ளனர். எனவே அடிமைகளுக்கு உரிமை இல்லை என்கிற அளவில் அண்ணாமலையின் நடவடிக்கைகள் உள்ளது. எந்த கட்சியும் செய்யாத ஒன்றை பாஜக செய்கிறது. கூட்டணி கட்சியினுடைய முக்கிய வழி காட்டு குழு உறுப்பினரையே பாஜக தங்களது கட்சியில் சேர்த்துக் கொள்கிறது என்றால் அந்தக் கட்சி ஓபிஎஸ் இபிஎஸ்சை தலைவர்களாகவே மதிக்கவில்லை என்றுதானே அர்த்தம் என விமர்சித்துள்ளார். 
 

click me!