
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை " நெருப்பு" என முன்னாள் மாநகராட்சி மேயரும், அதிமுகவிலிருந்து விலகி இருப்பவருமான சைதை துரைசாமி கூறியுள்ளார். திராவிட இயக்க தலைவர்களைப் போல மேடையில் பேசக்கூடிய ஆற்றல் பெற்றவராக அண்ணாமலை இருக்கிறார் என்றும் சைதை துரைசாமி அண்ணாமலையை பாராட்டியுள்ளார். இது பாஜக தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா இருந்தபோது அவரின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக இருந்தவர் சைதை துரைசாமி. இவர் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயராகவும் இருந்தவர் ஆவார். ' கை சுத்தம் மாநகராட்சி சுத்தம் ' இதுதான் தனது கொள்கை என பேசிய அவர், மேயரான பிறகு பெரிய அளவில் செயல்படவில்லை. செயல்படாத மேயர் என்றே பலரும் அப்போது அவரை விமர்சித்தனர். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கடந்த சில வருடங்களாகவே அதிமுகவின் எந்த நிகழ்ச்சிகளும் கலந்து கொள்ளாமல் விலகி இருக்கிறார்.
இதேபோல அதிமுக தலைமைகளும் அவரைப் பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை. இருந்தாலும் தனது பகுதியில் ஓரளவுக்கு செல்வாக்கு மிகுந்தவர் என்ற அடிப்படையில் அவர்கள் சட்டமன்ற தேர்தலில் சைதை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போதைய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியனை எதிர்த்து அவர் களம் கண்டார் ஆனால் சைதை துரைசாமி தோல்வியை சந்தித்தார்.
இந்நிலையில் மீண்டும் பழையபடி அதிமுகவின் நிகழ்ச்சிகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார் சைதை துரைசாமி. திமுக ஆட்சிக்கு வந்து அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டம், போராட்டங்களில்கூட அவர் கலந்து கொள்ளவில்லை. ஆனால் மறுபக்கம் பாஜகவின் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டுள்ளார். இது அதிமுகவினரை அதிர்சியடைய வைத்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மனதின் குரல், பிரதமர் மோடியின் மன் கி பாத் உரையை தொகுத்து நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்தான் சைதை துரைசாமி கலந்துகொண்டுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நூலை வெளியிட சைதை துரைசாமி அதைப் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக வெளியான அறிவிக்கை அடுத்து ஊடகங்கள் அவரிடம் கேள்வி எழுப்ப கொந்தளிப்பின் உச்சத்திற்கு சென்ற சைதை துரைசாமி, நான் ஒரு கல்வியாளராக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். இலவச ஐஏஎஸ் அகாடமி நடத்துவதால் பல கட்சியினரும் பல நிகழ்ச்சிகளிலும் என்னை அழைத்து சிறப்பு விருந்தினராக பேச வைக்கிறார்கள். அதுபோன்றுதான் தற்போதைய பாஜக நடத்தும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன்.
இதில் என்ன தவறு இருக்கிறது.? இதற்கு ஏன் அரசியல் சாயம் பூசுகிறீர்கள் என கொந்தளித்தார்.பின்னர் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் மேடையில் பேசிய அவர், அண்ணாமலை ஒரு " நெருப்பு" என்றார். அண்ணா என்றால் நெருப்பு என்று அர்த்தம். அதனுடன் மலையும் சேர்ந்து இருக்கிறது அப்படி என்றால் உங்கள் தலைவர் ஒரு நெருப்பு, அண்ணாமலை அவர்கள் திராவிட இயக்க தலைவர்களின் போல பேசக்கூடிய ஆற்றல் பெற்றிருக்கிறார். நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டதை அறிந்த பலரும் சைதை துரைசாமி பாஜக நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா.? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அவர்களுக்கெல்லாம் நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன் இந்த நிகழ்ச்சியில் நான் நன்றி உணர்ச்சியோடு கலந்து கொண்டிருக்கிறேன். நான் 14 வயது முதல் கரம் பிடித்து நடந்த என் தானைத் தலைவர் எம்ஜிஆர் அவர்களுடைய பெயரை சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்திற்கு வைக்க வேண்டுமென்ற என்னுடைய கோரிக்கையை ஏற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆரின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
எம்ஜிஆரின் பெயர் இந்திய புகழை மட்டுமல்ல உலக புகழை பெற்றிருக்கிறது. அதற்கு காரணமான பாரதப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தான் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன். அதனால் லட்சக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்கள் பிரதமர் மோடிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.