தொடரும் மின் ஊழியர்களின் உயிரிழப்பு.! சாராய விற்பனையில் மட்டும் செந்தில் பாலாஜிக்கு அக்கறை-சீண்டும் அண்ணாமலை

By Ajmal KhanFirst Published Jan 25, 2023, 3:52 PM IST
Highlights

உடனடியாக, சாராய அமைச்சர் தனது தூக்கத்திலிருந்து விழித்து, மின் துறை ஊழியர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.  அவர்களுக்குத் தேவையான தரமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

மின் விபத்து- ஊழியர்கள் பலி

மின்சார விபத்தில் சிக்கி மின் ஊழியர்கள் உயிரிழந்தது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மின் துறை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும்போது, மின்சார விபத்தில் மரணமடைந்த மின் துறை ஊழியர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியடைய வைக்கிறது. ஆளுங்கட்சிக்கோ, சாராய அமைச்சருக்கோ, மின் துறை ஊழியர்களைப் பற்றிய அக்கறையோ கவலையோ இல்லை.  ஆனால், அவர்கள் பற்றி பொதுமக்கள் கவனத்துக்குக் கொண்டு வருவதும், அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கடமையாகக் கருதுகிறேன். போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாமல், கடந்த சில மாதங்களில் திருச்சி, நாகை, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில்  5 பேர்உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

திமுகவோடு கை கோர்த்து அதிமுக,பாஜகவை எதிர்க்கும் கமல்..! இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ்க்கு ஆதரவு.! அதிரடி அறிவிப்பு

அக்கறையில்லாத அமைச்சர்

இவர்கள் மட்டுமல்லாது, மேலும் பல மின் ஊழியர்களும் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் துயரமான சம்பவங்கள் எல்லாம், நாளிதழ்களில் ஒரு நாள் செய்தியாகவே கடந்து செல்கின்றன. மின்சாரத் துறைக்கும் பொறுப்பான சாராய அமைச்சரோ, இது பற்றி எந்தக் கவலையும் இல்லாமல், சாராய விற்பனையில் மட்டுமே முழுக் கவனமும் செலுத்தி வருகிறார். அனைத்து வகையான மின் ஆபத்துகள், வெள்ளம் மற்றும் உயர் மின்னழுத்த பகுதிகளைச் சுற்றியுள்ள மின் கம்பங்களில் பணிபுரிவதால் ஏற்படும் ஆபத்து, சரியான பாதுகாப்பு உபகரணங்கள் அணியாததால் ஏற்படும் அபாயம் குறித்து அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். ஊழல் இல்லாமல், தரமான மின் பொருள்களைக் கொள்முதல் செய்வதும், மின்சாரத்தால் ஏற்படும் இறப்புகளைக் குறைக்கும்.

பாதுகாப்பு உபகரணம் அவசியம்

உடனடியாக, சாராய அமைச்சர் தனது தூக்கத்திலிருந்து விழித்து, மின் துறை ஊழியர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.  அவர்களுக்குத் தேவையான தரமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். பராமரிப்புப் பணிகளில் ஊழியர்கள் ஈடுபடும்போது, மின் துறைப் பொறியாளர்கள் உடனிருக்க வேண்டும். மின் ஊழியர்களின் பணிச் சூழல் பாதுகாப்பில் தொடரும்  அலட்சியப் போக்கை நிறுத்திவிட்டு,  “2020, தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் குறியீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.  இனியும் மின் துறை ஊழியர்களின் உயிர்களோடு விளையாடும் அமைச்சரின் அலட்சியப் போக்கு தொடருமானால், தமிழக பாரதிய ஜனதா கட்சி அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்று எச்சரிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களை பார்வையிட தடை..! தமிழக அரசு திடீர் உத்தரவு.! என்ன காரணம் தெரியுமா.?
 

click me!