மந்திரிகளாக இருந்ததே வசூல் செய்வதற்காகத்தான். அதனால் நடைபயணம் சென்றால் வசூலுக்காக என்று நினைத்துக் கொள்கிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை விமர்சித்த அண்ணாமலை, இந்த டிஎன்ஏவை மாற்ற முடியாது என கூறினார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நமக்கு தீர்ப்பு சாதகமாக தான் வரும், ஆனால் பிரச்சனை எல்லாம் செய்து தண்ணீர் வாங்கினால் அதுவும் பிரச்சனை தான். ஏனென்றால் பெங்களூரிலும் தமிழர்கள் இருக்கிறார்கள். நமது எல்லை மாவட்டங்களில் கன்னடம் பேசுபவர்கள் இருக்கிறார்கள். பிரச்சனைகள் செய்யாமல் இரண்டு மாநில முதல்வர்களும் சுமூகமாக பிரச்சினையை தீர்க்க வேண்டும். காவிரி விவகாரத்தில் தற்போது நிலைமை கைமீறி மத்திய அரசு வரை சென்று விட்டது. ஆதலால் தமிழகத்திற்கு சாதகமான முடிவு வரும் என்பதில் எள்ளளவுக்கும் எனக்கு சந்தேகம் இல்லை.
இளைஞர்களுக்கான அரசியல் களம் மாறிவிட்டது. இன்னும் பழைய பஞ்சாங்கத்தை பேசிக்கொண்டு இருந்தால் ஒருத்தரும் ஓட்டு போட மாட்டார்கள். என்னுடைய கடமை தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பது இதில் போட்டியோ, பொறாமையோ, இன்னொரு கட்சியை தாழ்த்தி தான் பாஜகவை வளர வைக்க வேண்டும் என்று அவசியம் பாஜகவுக்கு இல்லை. எங்களுடைய உழைப்பில் பாஜக வளர வேண்டும் என்பதற்காக உழைக்கிறோம் என தெரிவித்தார். அண்ணாமலை மேற்கொள்வது பாத யாத்திரை அல்ல, வசூல் யாத்திரை என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் குறிப்பிட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், இதற்கு முன்பு மந்திரிகளாக இருந்து வசூல் செய்து பழக்கப்பட்டு இருந்தார்களோ. அவர்கள் இதை வசூலாக பார்க்கிறார்கள். அவர்களுக்கு வசூல் செய்து தான் பழக்கம். மந்திரிகளாக இருந்ததே வசூல் செய்வதற்காகத்தான். அதனால் நடைபயணம் சென்றால் வசூலுக்காக என்று நினைத்துக் கொள்கிறார்கள். இந்த டிஎன்ஏ மாற்ற முடியாது.
நேர்மையாக அரசியல் செய்பவர்களுக்கு மட்டும்தான் நான் பேசும் அரசியல் புரியும். வசூல் செய்து மந்திரிகளாக இருந்தவர்களுக்கு நேர்மை என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாது. யார் பேசினாலும் பேசட்டும். தூற்றுபவர்கள் தூற்றட்டும். பாஜகவின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்டு பேசுகிறார். அறிஞர் அண்ணா திராவிடக் கொள்கையில் குடும்ப அரசியல் வேண்டாம் எனக் கூறிய மாபெரும் தலைவர், சுத்தமான அரசியலை தர வேண்டும் என நினைத்தார். இன்று அண்ணாதுரைக்காக வருபவர்கள், அண்ணாதுரை வழிப்படி நடந்து கொண்டார்கள் என்றால் அவர்களின் கூறும் கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவரின் வழிப்படி நடந்து கொள்ளவில்லை,
அண்ணாதுரையின் வளர்ப்பு பிள்ளைகள் நான்கு பேரும் அரசியலுக்கு போக கூடாது என்றார்கள். அண்ணாதுரை மகன் பரிமாறன் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? குடும்பத்தினருக்கு பாரமாக ஆகிவிடக்கூடாது செலவு செய்வதற்கு பணம் இல்லை என்பதற்காக தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் எத்தனை பேருக்கு அண்ணாதுரையின் குடும்பத்தினரின் பெயர் தெரியும்? நான் சரித்திரத்தை மறுத்துப் பேச வேண்டும் என்று அவசியம் இல்லை.
கொள்கைகள் வித்தியாசம் இருக்கும்போது காட்டுகிறோம். திமுகவை விமர்சனம் கூட கலைஞர் கருணாநிதி மரியாதையாக பேசுகிறோம். கலைஞர் கருணாநிதிக்கும் எங்களுக்கும் கொள்கைக்கும் வித்தியாசம் இருப்பதால் அதை பொது மேடைகளில் விமர்சனம் செய்கிறோம். பாஜகவை பொறுத்தவரை நாங்கள் யாரையும் கடவுளாக பார்ப்பவர்கள் கிடையாது எங்களை பொறுத்தவரை எல்லாரும் மனிதர்கள் தான் அந்த மனிதர்களிடம் எங்களுடைய கருத்தை பேசுகிறோம்
. அண்ணாதுரை அவர்களை நான் தவறாக சொல்லவில்லை. சரித்திரத்தில் இருந்ததை எடுத்துக் கூறியிருக்கிறேன். நான் யாருடைய அடிமையும் கிடையாது. கும்பிடு போட்டுக் கொண்டு அவர்கள் கூறுவதை கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தனிக்கட்சி, தனிக் கொள்கை, சனாதனம் எங்கள் உயிர் மூச்சு. அதற்காக பேச முடியவில்லை என்றால் நான் எதற்காக இந்த இருக்கையில் அமர வேண்டும்.. சரித்திரத்தை புரட்டிப் பாருங்கள். சரித்திரத்தை தயவுசெய்து சரித்திரமாக பாருங்கள். நீங்கள் ஒருவராய் கடவுளாக பார்த்தால் நானும் அவரை கடவுளாக பார்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை என அண்ணாமலை தெரிவித்தார்.