தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற உத்தரவிட்ட தமிழக அரசை கண்டித்து நீலகிரி மாவட்டம் கூடலூரில் இந்த மாதம் 20ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும் இந்த ஆர்பாட்டத்தில் தானும் கலந்து கொள்ள இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தேயிலை தோட்ட தொழிலாளர்கள்
TANTEA வசமுள்ள நிலத்தின் குறிப்பிடத்தக்க பகுதியை வனத்துறையிடம் திருப்பி ஒப்படைக்க இருப்பதாக தகவல் வெளியானது இதற்க்கு பல்வேறு அரசியில் கட்சியினர் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில் இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையிலிருந்து அழைத்துவரப்பட்ட இந்தியத் தமிழ்க் குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்க, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் ஆகிய இடங்களில், குடியமர்த்தப்பட்டனர். இவர்களில் சுமார் இன்று 15,076 (மக்கள் தொகை: 65,111) மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்கள், இன்றளவும் தமிழக அரசின் TANTEA-ஐ மட்டுமே நம்பி வாழ்கின்றன. ஆனால் TANTEA நிர்வாக இயக்குனர், தமிழக அரசுக்கு எழுதிய கடிதங்களின் படி, TANTEA வசமுள்ள நிலத்தின் குறிப்பிடத்தக்க பகுதியை, TANTEA நிறுவனத்திற்கு மேலும் நஷ்டம் ஏற்படாமல் இருக்க வனத்துறையிடமே திருப்பி ஒப்படைக்கப் பரிந்துரைத்தார்.
நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவு
நடுவட்டம் கோட்டம், வால்பாறை கோட்டம், குன்னூர் கோட்டம், கோத்தகிரி கோட்டம், பாண்டியர் கோட்டம், சேரங்கோடு கோட்டம், நெல்லியாளம் கோட்டம், சேரம்பாடி கோட்டம் என மொத்தம் 2152 ஹெக்டேர் நிலம் ஒப்படைக்கப்படும் என TANTEA நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தனது பரிந்துரையில் கூறியிருந்தார். ஆனால், நிர்வாக இயக்குனரின் கூற்றுப்படி, இந்த ஏற்பாட்டின் படி, TANTEA நிறுவனத்திற்கு, ஆண்டுக்கு ரூ.5.98 கோடிகள், மிச்சமாகும். இந்த சிறிய தொகைக்காக இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் அகதியாக்குவதா என்பதை கூட சிந்திக்கவில்லை இந்த திறனற்ற திமுக அரசு. TANTEA நிறுவனத்தின் பரிந்துரைகளை ஏற்று, நிலங்களை மீண்டும் வனத்துறையிடம் ஒப்படைக்க தமிழக அரசு, அக்டோபர் 3, 2022 தேதியிட்ட G.O (Ms) எண். 173 ஒரு அரசாணையை வெளியிட்டது.
வீடுகளை காலி செய்ய உத்தரவு
அரசின் இந்த முடிவால் அப்பாவித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கவலைகிடமாக உள்ளது. TANTEA நிர்வாகம், வேலைக்காக வேறு தோட்டங்களுக்கு செல்லாதவர்கள் விருப்ப ஓய்வு பெற வேண்டும் என்பதால் 2400 குடும்பங்கள் மற்றும் 15000 மக்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. தாயகம் திரும்பியதிலிருந்து, இந்த தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் இந்தியர்கள் பெரிதாக எதுவும் சம்பாதிக்கவில்லை, அதற்காக போராடவும் இல்லை. மேலும் அகதிகளுக்கு அரசாங்கம் வழங்கிய சிறிய குடியிருப்புகளில் அவர்கள் தொடர்ந்து வசித்து வருகிறார்கள். TANTEA நிறுவனத்தால் வழங்கப்பட்ட அகதிகளுக்காக கட்டப்பட்ட வீடுகளை காலி செய்யுமாறு தற்போது நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
தமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே இலக்கு – திருமாவளவன் சூளுரை
மீண்டும் அகதிகளாகும் மக்கள்
இரண்டாவதாக, அந்தத் தோட்டத் தொழிலாளர்களில், தாமாக முன்வந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, வெளியேறும் போது கொடுக்கப்படவேண்டிய நிவாரணங்களும் அரசால் கொடுக்கப்படவில்லை. இந்திய நாட்டை நம்பி வந்த அகதிகளுக்கு வேறு எங்கு செல்லவும் வாய்ப்புகளும் இல்லை. மக்கள் கேள்வி கேட்டால், அரசு அதிகாரிகள் தொழிலாளர்களை அலட்சியப்படுத்துகிறார்கள். தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பு TANTEA நிறுவனத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும் என உறுதியளித்தார். ஆனால் வழக்கம் போல் வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு, எம் மக்களை மீண்டும் அகதிகளாக்கியுள்ளது. நான் இலங்கை சென்றிருந்த போது அங்கிருந்த மலையக தமிழர்களை சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்தது. அங்கு குடியுரிமை பெற்றும் எந்தவித வசதிகளும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள் எம் மக்கள். இங்கு இடம்பெயர்ந்த தமிழ் மக்களை அகதிகளாகவே வைத்துள்ளது தமிழக அரசு.
நவம்பர் 20 ஆம் தேதி போராட்டம்
திமுகவின் இந்த இரட்டை நிலைப்பாடு, நம்பிவந்த நம் மக்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகும். உடனடியாக அனைவருக்கும் மாற்று வேலைக்கான ஏற்பாட்டை அரசு செய்யவேண்டும். அனைவரையும் நட்டாற்றில் விட்டதுபோல வெளியேற்றுவது தொழிலாளர்களை வஞ்சிக்கும் செயலாகும். தற்காலிகமாக குடியிருப்புகளில் அவர்கள் வாழ இடம் மட்டும் கொடுப்பதால், அவர்களால் என்ன செய்ய முடியும்? இப்படி எம் மக்களை வஞ்சிக்கும் இந்த திறனற்ற திமுக அரசுக்கு எதிராக நீலகிரி மாவட்டம் கூடலூரில் இந்த மாதம் 20ஆம் தேதி ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை தமிழக பாரதிய ஜனதா கட்சி முன்னெடுக்கும். அதில் நானும் நேரடியாக் கலந்துகொள்ள இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
திராவிட மாடலா.? வெறுப்பு மாடாலா..? வாக்குறுதிக்கு எதிராக இரட்டை வேடம் போடும் திமுக..! ஓபிஎஸ் ஆவேசம்